பிறமொழி சினிமாக்களின் வர்த்தகம் நடப்பாண்டில் உச்சத்தில் இருக்கும் நிலையில், தமிழ்சினிமாவின் வர்த்தகம் பெரும் தேக்கத்தை சந்தித்திருக்கிறது.
கடந்த 7 மாதங்களில் பெரிய படங்கள் பல வெளிவந்தும் கூட தமிழ்சினிமா வர்த்தகம் உயரவில்லை. தெலுங்கு சினிமா படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை குவித்து வரும் நிலையில் இவ்வாண்டில் இதுவரை 125 படங்களுக்கு மேல் வெளிவந்தும் தமிழ்சினிமாக்களின் அதிகபட்ச வசூல் 100 கோடி ரூபாயாகவே இருக்கிறது. மகாராஜா, அரண்மனை -4 படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது.
ஆண்டின் தொடக்கத்தில் 16 படங்கள் வெளிவந்தாலும் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் மட்டுமே 75 கோடி ரூபாய் வசூலை எட்டின. இந்த இரண்டு படங்களின் பட்ஜெட்டுக்கும் வசூலிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் போனது.
ரஜினியின் லால் சலாம், ஜெயம்ரவியின் சைரன் படம் என்று 21 படங்கள் வந்தாலும் பிப்ரவரி மாதமும் தமிழ்சினிமாவுக்கு ஏமாற்றத்தையே தந்துவிட்டது. ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்தாலும் இந்த அளவுக்கு அந்தப்படம் சுமார் ரகம் படங்களின் லிஸ்ட்டில் சேரும் என்று யாரும் நினைக்கவேயில்லை. மார்ச் மாதத்தில் 21 படங்கள் வந்தும் ஏமாற்றமே.
தமிழ்ப்புத்தாண்டு திருப்புமுனையாக என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏப்ரல் மாதம் ஏமாற்றத்தையே தந்தது. பெரிய பில்டப்பில் வெளிவந்த ரத்னம் சினிமா பெரிய தோல்விப்படமானது.
விடுமுறை கொண்டாட்ட மாதம் என்பதால் மே மாதம் என்றாலே எப்போதும் திருப்திகரமாகவே அமையும். அதை குறிவைத்தே குழந்தைகள், குடும்பத்தினரை கவரும் விதமாக அம்மாதத்தில் படங்கள் வெளியாகும். அந்த வகையில் விடுமுறையை குறிவைத்து வந்தாலும் எதிர்பார்த்ததை விடவும் வரவேற்பைப்பெற்று 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டது அரண்மனை-4 சினிமா. சூரி நடிப்பில் வந்த கருடன் படமும் நல்ல வரவேற்பைப்பெற்று திரையரங்க உரிமையாளர்களை மகிழவைத்தது. 60 கோடி ரூபாய் வரை அப்படம் வசூலித்துள்ளதால் சூரி’க்கும் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது.
ஜூன் மாதம் விஜய்சேதுபதிக்கு உகந்த மாதமாக அமைந்துவிட்டது. மகாராஜா படம் 100 கோடி ரூபாய் வசூலித்து அவரின் துவண்டு கிடந்த மார்க்கெட்டை தூக்கி உயர்த்திவிட்டது. ஓடிடி தளத்திலும் இப்படம் நல்ல வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. பல நாடுகளில் பல மொழிகளில் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெரிய எதிர்பார்ப்பில் தயாரான இந்தியன் -2 படுமோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. அதே நேரம் தனுஷின் ராயன் படம் வசூலில் திருப்திகரமாக இருக்கிறது.
அக்டோபர் மாதம்தான் தமிழ்சினிமாவை காப்பாற்றும் போலிருக்கிறது என்று திரையுலகினர் ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கின்றனர். அக்டோபர் தொடக்கத்தில் அதாவது ஆயுதபூஜையை முன்னிட்டு ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா படங்கள் வெளிவர இருக்கின்றன. இவ்விரு படங்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. மாதக்கடைசியில் தீபாவளி பண்டிகையை குறிவைத்திருக்கின்றன அஜீத்தின் விடாமுயற்சியும், சிவகார்த்திகேயனின் அமரன் படமும். இரண்டு படங்களின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. அஜித் படம் என்பதால் வசூலில் குறைவிருக்காது என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
முன்னதாக இம்மாதம் சுதந்திர தினத்தன்று தங்கலான், ரகு தாத்தா, டிமான்டி காலணி -2 படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களோடு வெளியாவதாக இருந்த பிரசாந்த் நடித்த, இந்தியில் பெரு வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக் படமான அந்தகன் படமும் வெளியாவதாக இருந்தது. ஆனால், கூட்டத்தில் வருவதில் விருப்பம் இல்லாமல் 9ம் தேதியே திரைக்கு வருகிறது. இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தமிழிலும் அதே வரவேற்பினைப்பெறுமா? என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
டிமான்டி காலணி படம் ரசிகர்களை கவர்ந்த படம் என்பதால் அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அதே மாதிரி கேஜிஎப் வாழ்க்கை குறித்த விக்ரம் – பா.ரஞ்சித் கூட்டணியில் வரும் தங்கலான் படமும் எதிர்பார்ப்பினை எகிறவைத்திருக்கிறது. எதிர்பார்த்த வசூலை ஈட்டவேண்டும் என்றே தமிழ்சினிமா நினைக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பதால் ரகு தாத்தா படத்திற்கும் வரவேற்பு இருக்கிறது.
கடந்த 2024ஆம் ஆண்டில் சின்ன பட்ஜெட் படங்கள் பல வந்து நல்ல வசுலைத்தந்தது. ஆனால் இவ்வாண்டு பெரிய பட்ஜெட் படங்களாக வந்தும் பெரிய அளவில் வசூலை அள்ள முடியாதது சோகம்தான்.