எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக 9 தேர்தல் தோல்விகளை சந்தித்திருந்த நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10வது தோல்வியை சந்தித்தது. 7 இடங்களில் டெபாசிட் இழப்பும், பல இடங்களில் 4வது இடத்திற்கும் அதிமுக போகும் நிலை குறித்து கட்சியினரும் கட்சிக்கு வெளியேயும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அதிமுக நான்கு அணியாக பிரிந்து இருப்பதால் வாக்குகள் பிரிந்துவிட்டன என்றும், அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றுவிட்டன. அதனால்தான் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. பாஜகவுக்கு அதிமுகவினர் கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாக்கு சேகரித்தனர் என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில்,
அதிமுக உடைந்து ஆளுக்கொரு திசையில் இருப்பதால்தான் வாக்குகள் சிதைந்து போயிருக்கின்றது என்ற விமர்சனத்தை எடப்பாடி பழனிச்சாமி அறவே மறுத்து, அவர்கள் எல்லாம் பிரிந்து சென்றதால்தான் அதிமுகவுக்கு 1% கூடுதல் வாக்கு கிடைத்திருக்கிறது என்றார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கின்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். தமிழகத்தில் 90% இடங்களுக்கு சென்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதிமுகவை பொறுத்தவரையிலும் நான் ஒருவர் மட்டுமே எல்லா இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தேன். இவ்வளவுக்கு இடையிலும் 2019ல் பெற்ற வாக்குகளை விட 1 % கூடுதலாக இந்த தேர்தலில் பெற்றுள்ளது அதிமுக என்றார் எடப்பாடி.
2014ல் பாஜக பாஜக கூட்டணி 18.8% வாக்குகள் பெற்றார்கள். 2024 தேர்தலில் 18.2% வாக்குகள்தான் பெற்றுள்ளார்கள். ஆனால், அதிக வாக்கு சதவிகிதத்தை எட்டி இருப்பதாக செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. திராவிட முன்னேற்றக்கழகமும் 2019ல் பெற்ற வாக்குகளை விட 2024ல் பெற்ற வாக்கு சதவிகிதம் 6.3% ஆக குறைவு. இவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது அதிமுகதான் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்கின்றன.
தென் மாவட்டங்களில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. அப்பகுதிகளில் அதிமுக வலுப்பெறும் என்றார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால், பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் அதிமுக இருக்கிறது என்ற விமர்சனத்தால் அதிமுகவுக்கு சிறுபான்மையின வாக்கு சதவிகிதம் குறைந்துவிட்டதா? என்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் தனியார் தொலைக்காட்சி நிருபர் முன்வைத்த கேள்விக்கு, பேட்டி தர மறுத்து, செய்தியாளரின் காதில் ரகசியமாக, ‘’எந்த பேட்டியும் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார். பொதுச்செயலாளர் சொன்னதை கேடுக்கணும்’’ என்கிறார். அவர் ரகசியமாக சொல்கிறேன் என்று சொன்னது செய்தியாளரின் மைக்கில் பதிவாகி, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் பேசியதே போதும். ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி கட்சியை களங்கப்படுத்த வேண்டாம் என்று உண்மையிலேயே எடப்பாடி உத்தரவிட்டுள்ளாரா? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில்.