2023இல் பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2024 சட்டமன்ற கூட்டத்தில் வந்த வேகத்திலேயே வெளியேறிவிட்டார். ஆளுநர் உரையில் சிலவற்றை தவிர்த்து சிலவற்றை சேர்த்து பேசியதால் 2023இல் வெளியேற்றம் செய்தார் ஆளுநர். இந்த முறை தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டி ஆளுநர் உரையை படிக்காமலேயே அவையை விட்டு வெளியேறி இருக்கிறார் ஆளுநர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டசபை துவங்கும். அந்த வகையில் புத்தாண்டில் இன்று காலை 9.30 மணிக்கு சட்ட சபை துவங்கியது.
கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில் அரசு தயாரித்து அளித்திருந்த ஆளுநர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும் ஆளுநர் உரையாற்றினார்.
இதனால், ஆளுநர் தவிர்த்த வாசகங்களுடன் ஆளுநர் உரை சட்டசபை குறிப்பில் இடம்பெறும் என்றும், உரையில் இல்லாததை பேசிய ஆளுநர் உரை குறிப்பில் இடம்பெறாது என்றும் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதில் கோபம் அடைந்த ஆளுநர் சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்பாகவே சபையில் இருந்து வெளியேறினார்.
2023இல் 4 நிமிடங்கள் மட்டுமே ஆளுநர் உரையை வாசித்தார் ஆர்.என்.ரவி. முதல் பக்கத்தில் உள்ளதை படித்துவிட்டு சில கருத்துக்களை தெரிவித்தார். பின்னர், ‘’வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஹெய்ஹிந்த், ஜெய்பாரத்’’ என்று சொல்லி உரையை முடித்தார்.
ஆளுநர் இருக்கையில் அமர்ந்ததும் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் ஆங்கிலத்தை தமிழாக்கம் செய்தார். உரையை வாசித்த பின்னர் அப்பாவு சில கருத்துக்களை சொன்னார். அதில் ஆளுநர் குறித்தும் சொன்னார். அதைக்கேட்டு சபையில் இருந்து வெளியேறினார்.
இந்த முறை, ஆளுநர் உரையை படிக்காமலேயே வந்த வேகத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையை விட்டு வெளியேறினார்.
வெளியேற்றம்:
ஆண்டின் முதல் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை கூடிய ஒரு சில நிமிடங்களில் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார்.
என்ன நடந்தது? : நிகழ்ச்சி நிரலின் படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் கடைசியில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. ஆனால், ஆளுநரோ முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அது நடைபெறாததால் ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார்.
முன்னதாக ஆளுநர் அவைக்குள் வரும்போது, அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் முழக்கம் எழுப்பினார்.
ஆளுநர் உரையை தொடங்குவதற்கு முன்பாக, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து, அண்ணா பல்கலை விவகாரத்தில் அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். ஆளுநர் இருக்கையை சுற்றி வளைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களும், வேல்முருகனும் ஆளுநர் இருக்கைக்கு முன்பாக வந்து நின்று, ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அதாவது அதிமுக உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகவும், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், தேசிய கீதம் இசைத்தால் அமளி சரியாகிவிடும் என்று ஆளுநர் தேசிய கீதம் இசைக்கக் சொல்லி வலியுறுத்தினார். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படாததால் உரையை படிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்.
ஆளுநர் வெளியேறியதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், வேல்முருகனும் வெளியேறினர். அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடந்து அமளியில் ஈடுபட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
ஆளுநர் மாளிகை விளக்கம் : ’’தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும்.
அது அனைத்து சட்டப் பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.’’ என்று சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
மோடி – அமித்ஷா: இந்த விளக்கத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆளுநர் மாளிகை, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டேக் செய்துள்ளது.
நீக்கம்: பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாகச் சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். நாடாளுமன்றத்தில் முதலிலும் கடைசியிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் இந்த பதிவு நீக்கப்பட்டு புதிய பதிவு போடப்பட்டது. அதில், நாடாளுமன்றத்தில் முதலிலும் கடைசியிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பது நீக்கப்பட்டிருந்தது.
கண்டன தீர்மானம் :
2023 ஆம் ஆண்டே ஆளுநரின் செயல்பாட்டுக்கு பேரவையிலேயே முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் விளக்கம்: ’’முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே சபை மரபு. அடுத்த ஆண்டும் மரப்புப்படியே சட்டமன்றம் செயல்படும். யார் சொன்னாலும் பேரவை மரபுகளை மாற்ற முடியாது. 3 ஆண்டுகளாக இதே பிரச்சனை நடக்கிறது. ஜனநாயக கடமையில் இருந்து தவறிவிட்டார் ஆளுநர்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேரவை நடத்துகிறது அரசு. இதற்கு எதிராக உள்ளது ஆளுநரின் செயல். எந்த ஆளுநரும் இதுவரையிலும் இது போன்று பிரச்சனை செய்ததில்லை. ’’ என்று விளக்கம் அளித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.
அவர் மேலும், ‘’முதல்வரை பார்த்தோ, என்னைப்பார்த்தோ பதாகைகளை ஏந்தி எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்பதால் அவர் மாணவி விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று, அவர் இந்த விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைத்து அவர் முன்பாக திரண்டு நின்று முழக்கம் எழுப்பி இருக்கிறார்கள்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
பழனிசாமி விளக்கம் : பேரவையில் இருந்து வெளியே வந்த எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, ‘’ஆளுநர் வெளியேற வில்லை. திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்’’ என்று கூறியுள்ளார்.
zf783o
l4f6rw