
அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனிடம் ஐந்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதுவும் சட்டப்பேரவைக்குள்ளேயே இந்த சமாதான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
வேளாண் பட்ஜெட்க்காக சட்டப்பேரவைக்குள் வந்த செங்கோட்டையனை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கையைப்பிடித்து இழுத்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அவரின் கையை தட்டிவிட்டுச் சென்றுள்ளார் செங்கோட்டையன்.
பேரவையில் முன்வரிசையில் அமராமல் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார் செங்கோட்டையன்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துகொண்டிருந்த நேரத்தில் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு சுமார் 15 நிமிடங்கள் செங்கோட்டையனிடம் பேசி சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் கே.பி.அன்பழகன் சுமார் 5 நிமிடங்கள் செங்கோட்டையனிடம் சமாதான பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

செங்கோட்டையனிடம் பேசிய பின்னர் கே.பி.அன்பழகன் எழுந்து சென்று முன் வரிசையில் அமர்ந்திருந்த எஸ்.பி.வேலுமணியின் காதில் ஏதோ சொல்ல, எஸ்.பி.வேலுமணி எழுந்து சென்று செங்கோட்டையன் அருகே அமர்ந்து 10 நிமிடங்கள் பேசி சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 10 நிமிடங்கள் செங்கோட்டையனிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் காமராஜும் 5 நிமிடங்கள் பேசி செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
அவர்களின் சமாதான பேச்சில் திருப்தி அடையாத செங்கோட்டையன், சட்டப்பேரவை முடிந்ததுமே எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து மூன்றாவது நுழைவு வாயில் வழியாக விறுவிறுவென்று சென்றுவிட்டார். அதன்பின்னரே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, செங்கோட்டையன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப, ’அதை அவரிடமே கேளுங்க’ என்று சீற்றம் கொண்டார். அவரிடம் கேட்டால், ’இது குறித்து பேச வேண்டாம் ’ என்று ஒதுங்கிக்கொண்டார்.
மாஜிக்கள் 5 பேரும் செங்கோட்டையனிடம் நடத்திய பேச்சுவார்த்தையினையும், அதிருப்தியில் இருந்து மாறாத செங்கோட்டையன் குறித்து அறிந்து ஆத்திரத்தில் இருந்த நேரத்தில்தான் செங்கோட்டைன் குறித்து கேள்வி எழுப்ப, மனுசர் கொதித்தெழுந்திருக்கிறார்.