
இந்தத் தலைப்பை முன்னிறுத்தி தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து பிப்ரவரி 8ந் தேதியன்று கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடந்தன. ஆவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும், ரயில்வே உள்பட தமிழ்நாட்டிற்கான மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், நிதியும் கிடைக்கவில்லை-நீதியும் கிடைக்கவில்லை என்றும் தி.மு.க.வினர் குற்றம்சாட்டி கண்டித்தனர். மத்தியிலும் மாநிலத்திலும் எதிரெதிரான கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் வெளிப்படுவது வழக்கம்தானே, அரசியலில் இதெல்லாம் சாதராணமப்பா என்று கடந்து போக நினைத்தால், “இல்லையில்லை.. உண்மையாகவே நாங்கள் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறோம்” என்பதை நிரூபிப்பதாகவே இருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள்.
இந்தியா முழுவதும் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், பள்ளிக்கல்விக்கானக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் 60% நிதியை ஒதுக்கீடு செய்யும். மீதி 40% நிதியை மாநில அரசு தனது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து செலவிடும். அந்த வகையில் 2024-2025ஆம் ஆண்டிற்காக தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான 3,586கோடி ரூபாயில் மத்திய அரசின் பங்களிப்புத் தொகை 2,152கோடி ரூபாய். மாநில அரசு செலவிட வேண்டிய தொகை 1,434 கோடி ரூபாய். 2024-25 நிதியாண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், அந்தத் தொகையை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கவில்லை.
ஒரு மாநிலத்திற்குரிய பங்களிப்பை ஏன் மத்திய அரசு வழங்கவில்லையென்றால், மோடி அரசின் தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழித் திட்டம், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை என்றும் அதனால் இந்தத் தொகையை வழங்கவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி தொடரும் வகையிலும், இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார அறிக்கையில் பாராட்டிய மத்திய அரசுதான் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்கான தமிழ்நாட்டிற்குரிய பங்களிப்பைத் தரவில்லை.
கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. பின்னர், எமர்ஜென்சி காலத்தில் மத்திய அரசு-மாநில அரசு இணைந்த பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. எனினும், தற்போதும் ஒவ்வொரு மாநிலத்திற்கான கல்விக் கொள்கைகள்-பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன்படி பள்ளிக்கல்வியும் பொதுத்தேர்வுகளும் நடைபெற்று வரும் நிலையில், கல்வியில் மாநிலங்களுக்கானத் தனிப்பட்ட உரிமையை பொதுப்பட்டியல் மூலம் வழங்கியுள்ள நிலையில், ஒரு மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு மாறாக, தேசியக் கல்விக் கொள்கையை மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்திப்பது ஜனநாயகத்திற்கு எதிரானதும், மாநில உரிமைகளை நசுக்குகின்ற செயலுமாகும்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா காலகட்டத்திலிருந்து மீண்டு, நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்திருக்கும் நிலையில், சிறப்பாக செயல்படும் மாநிலத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஒதுக்கப்படும் பணம், உரிய முறையில் அந்த மாநிலத்திற்கு வழங்கப்படாவிட்டால் அந்தத் தொகையை வேறு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்ற வகையில், தமிழ்நாட்டிற்கான 2,152 கோடி ரூபாயை குஜராத், உத்தரபிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விவரம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில மக்களின் மொழி, பண்பாடு, திறன் ஆகியவற்றுக்கேற்ப கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. தேவையும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மத்திய அரசின் கல்வித் திட்டத்திலான பள்ளிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 56 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை (தாய்மொழி+ஆங்கிலம்) நடைமுறையில் உள்ளது. மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படித்த பலர் இந்திய அளவிலும் உலக நாடுகளிலும் சிறப்பான இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அந்தந்த மாநிலங்களுக்குமான தனித்தன்மை, அதனதன் தாய்மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்விக்குத் தேவையான நிதியை ஒதுக்காமல் மத்திய பா.ஜ.க அரசு செயல்படுவது ஜனநாயகமல்ல. பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகள் சொல்வது போன்ற பாசிசமாகும்.
I eagerly anticipate your fresh and novel perspectives. It keeps me hooked for more.