சென்னை: பல்லாவரம் MTC பேருந்து நடத்துனர்களுக்கு பயணிகள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வகையில் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சோதனையில் உள்ள இந்தத் திட்டம் சென்னையில் உள்ள மற்ற பணிமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பல்லாவரத்தில் உள்ள பெருநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்து நடத்துனர்கள் சிலருக்கு, UPI மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சாதனங்கள் பயணிகள் ஏறும் இடத்தையும் அவர்கள் சேருமிடத்தையும் நடத்துனர்கள் தேர்வு செய்தப் பிறகு ‘பணம், கார்டுகள் மற்றும் UPI’ உள்ளிட்ட பல்வேறு கட்டண விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை பயணிகள் தேர்வு செய்து கட்டணம் செலுத்த வழிவகுக்கப்பட்டுள்ளது.
UPI முறையை தேர்வு செய்தால், QR-குறியீடு திரையில் காட்டப்படும், பயணிகள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.
இந்த சூழலில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB) அனைத்து MTC பேருந்துகளுக்கும் QR அடிப்படையிலான டிக்கெட் முறையை விரைவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
மேலும், மொபைல் செயலியைப் பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்து சென்னை மெட்ரோ, சென்னை புறநகர் ரயில்கள் மற்றும் MTC பேருந்துகள் என அனைத்து சேவைகளையும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதற்கு வசதியாக அனைத்துப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் QR-Code Scanner-களை ஒட்டவும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.