அறிவிக்கப்பட்டவை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதுதான் திறமையான நிர்வாகத்தின் அடையாளம். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலையையும், மக்களிடம் அவை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் ஆய்வு செய்யும் பணியை கோவையிலிருந்து தொடங்கியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர். மழை நீர் வடிகால்கள், காலை உணவுத் திட்டம், முதல்வரின் முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இப்படிப் பலவற்றையும் அவர் கடந்த மூன்றாண்டுகளாக ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதுடன், அதிகாரிகளும் மக்களின் தேவையை நேரில் அறிந்து நிறைவேற்றுவதற்கான முகாம்களையும் அறிவித்து செயல்படுத்தினார்.
ஒன்றரை ஆண்டுகாலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரக்கூடிய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுப் பணிகளை முதலமைச்சர் மேற்கொள்வதால் அவருடைய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் பணியில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியக் கட்டாயம் உருவாகியுள்ளது. துணை முதலமைச்சர் தனது பயணத்திட்டங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வதையும், மக்களின் கோரிக்கைகளை கவனிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தி.மு.க ஆட்சியில் அறிவித்து செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களைத் தற்போது பிற மாநிலங்களும் பின்பற்றுகிற நிலையைக் காண முடிகிறது. விரைவில் தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களில் களம் காணும் காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க கூட்டணியும் முன்வைக்கும் தேர்தல் அறிக்கைகளில் தி.மு.க.வின் திராவிட மாடல் திட்டங்கள் எதிரொலிக்கின்றன. இது தி.மு.க. ஆட்சிக்கும் அதன் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்திருக்கும் இந்திய அளவிலான நற்சான்றிதழ்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அமைச்சர்களும் மேற்கொள்ளும் கள ஆய்வின்போது மக்களிடமிருந்து வெளிப்படும் முக்கியமான கோரிக்கைகளில் சிலவற்றைத் தீவிரமாக கவனித்து செயல்படுத்த வேண்டியுள்ளது. மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இணைந்ததால், தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டு, மக்களை பாதிக்கிறது. மாதம் ஒரு முறை மின் கட்டணக் கணக்கெடுப்பு என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அதுபோல, தொழில்நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணமும் தொழில் முனைவோரைப் பாதிக்கக்கூடியதாக உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் உயர்த்தும் சொத்து வரிக்கும் மத்திய அரசின் நெறிமுறைகள் காரணம் என்றாலும், அதை வசூலிப்பது மாநில அரசுதான் என்பதால் முதலமைச்சர்-துணை முதலமைச்சர் ஆகியோரிடம்தான் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான மேயர், சேர்மன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சிக்காரர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டியதும் மிகவும் அவசியமாகிறது. சிறப்பான திட்டங்களை அரசு அறிவித்தாலும், அது கடைக்கோடி மக்களிடம் சென்று சேர்வதில் மேற்சொன்ன மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவை என்பதால் அவர்களின் செயல்பாடுகளுக்கேற்ற தாக்கமே சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஆதரவு அல்லது எதிர்ப்பு ஓட்டுகளாக மாறும்.
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்-அரசு உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் பல கோரிக்கைகள் இன்று வரை நிறைவேறவில்லை என்பதால் போராட்ட அறிவிப்புகளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்காலிகப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிட்டோரைப் பணி நிரந்தரம் செய்வது நிதிச் சிக்கல் தொடங்கி பல்வேறு காரணங்களால் நிறைவேறாமல் இருப்பது சம்பந்தப்பட்டவர்களிடமும் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடமும் அதிருப்தியை உருவாக்கி வருகிறது.
காலியாக உள்ள அரசுப் பணியிடங்கள், மருத்துவப் பணியிடங்கள், கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்-விரிவுரையாளர்கள் உள்ளிட்டவற்றை நிரப்புவதில் சிக்கல்களும் காலதாமதமும் தொடர்கின்றன. தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் நிர்வாகச் செயல்பாடுகளில் அ.தி.மு.க ஆட்சிக்கும் தி.மு.க. ஆட்சிக்கும் பெரிய வேறுபாடில்லை என்பதே அரசு வேலையை நம்பி போட்டித் தேர்வுகளை எழுதியவர்களிடமும், எழுதுவதற்குத் தயாராகிறவர்களிடமும் உள்ள மனநிலையாகும்.
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு உறுதி செய்வதுடன், மாவட்ட-நகர அளவில் இது போன்ற சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். தேர்தலுக்குத் தேர்தல் பொதுமக்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அதைத் தனக்கு சாதகமான நம்பிக்கையாக மாற்ற வேண்டிய தேவையும் ஆளுங்கட்சிக்கு உள்ளது.
மக்கள் மாறினாலும் கட்சிக்காரர்கள் உறுதியாகத் தலைமைப் பக்கம் நிற்கக்கூடியவர்கள். அவர்களின் கோரிக்கைகள் வண்டி வண்டியாக உள்ளன. அரசுப் பணிகளின் கள ஆய்வு போல, கட்சி நிர்வாகிகளிடமும் கள ஆய்வைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர். இதுதான் களத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக்கூடியது, 2026 சட்டமன்றத் தேர்தலின் சவால்களை உணர்த்தக்கூடியது. உணர்வதும், அதற்கேற்ப உழைப்பதும், தீர்வுகள் மூலம் நம்பிக்கையைப் பெறுவதுமே களத்தின் வெற்றியை உறுதி செய்யும்.