
அநேகமாக நான்குமுனை போட்டிதான் போலிருக்கிறது என்றே சொல்கிறது தற்போதைய தமிழ்நாட்டின் தேர்தல் கள நிலவரம். அதிமுக – பாஜக கூட்டணி 99% சதவிகிதம் உறுதியாகிவிட்டதால் திமுக, அதிமுக, நாதக, தவெக என 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டியே உறுதியாகிறது.
தவெக கட்சி தொடங்கியதில் இருந்தே அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வமாக இருந்தது. ஆனால், துணை முதல்வர் பொறுப்பு, கூடுதல் சீட் பிடிவாதத்தால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளாததால் அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்த தோல்வியில் முடிந்தது என்பதையே வெளிப்படுத்துகிறது விஜய்யின் தவெக முதல் பொதுக்குழு பேச்சு.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் சொல்வதைப்பார்த்தால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றுதான் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியும் அதனால்தான் தவெக இல்லை என்று ஆகிவிட்டதால் பாஜகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
பொதுவெளியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிக்காவிட்டாலும் கூட, அவரின் டெல்லி உள்ளரங்க சந்திப்புகள் அதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவானதும்தான் நாதகவை கூட்டணிக்கு அழைத்திருக்கிறது தவெக. சீமான் தரப்பில் இருந்து அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் இந்த நேரம் வரையிலும் தகவல் வருகிறது. ஆகவே, வரப்போகும் தேர்தலில் நான்குமுனை போட்டி என்று இருக்கையில், ‘’2026இல் அறுதிப்பெரும்பான்மையுடன் த.வெ.க. ஆட்சி அமையும்’’ என்று விஜய் சொல்வது, ஒரு தலைவராக கட்சியினரை ஊக்கப்படுத்துகிறார் என்று விமர்சனங்கள் கடந்து போகின்றன.

அதே நேரம், 52 ஆண்டுகாலம் அரசியல் களத்தில் இருக்கும் அதிமுகவை, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அதிமுக இடத்திற்கு த.வெ.கவை விஜய் நகர்த்துகிறார் என்பது, அவரது அரசியல் சாதுர்யம் என்றாலும் இதை அதிமுக எப்படிப் பார்க்கிறது?
’’விஜய்க்கு பேராசை’’ என்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை. ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, ‘’தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் அவ்வாறு பேசியுள்ளார் விஜய். உண்மையான கள நிலவரம் அதிமுக – திமுகதான்’’ என்கிறார்.