ஒரு குடும்பத்திற்கு மகிழ்ச்சியும் பெருமிதமுமாக அமைவது அதன் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிதான். இந்திய சமூகம் தனக்காக வாழ்வதைவிட, தன் வாரிசுகளுக்காக வாழ்கின்ற குடும்ப அமைப்பைக் கொண்டதாகும். எனவே, ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை‘ என்பதே ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்’ மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியைத் தன் பெற்றோருக்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமுதாயத்திற்கும் வழங்கியிருக்கிறார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள புதுப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா. திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு பெண்குழந்தைகளுடன் மதுராந்தகத்தில் வாழ்ந்து வருகிறார். துர்காவின் தந்தை சேகர் மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளாராக வேலை பார்த்து வந்தார். அடிப்படை நிலைப் பணியாளரான அவருக்குத் தன் குடும்பத்தின் அடுத்த தலைமுறை நல்ல முறையில் படித்து உயர்ந்து நிலைக்கு வரவேண்டும் என்பது கனவு. தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் படித்தார் துர்கா. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-1, குரூப்-4 தேர்வுகளை எழுதினார். வெற்றி-தோல்வி என மாறி மாறி வந்தாலும் சளைக்காமல் தன் முயற்சிகளைத் தொடர்ந்தார்.
கடுமையானப் பொருளாதார நெருக்கடியிலும் தன் தந்தை போராடிக் கொண்டிருப்பதை உணர்ந்து, படிப்பு ஒன்றுதான் தன் வாழ்வை உயர்த்தும் என்பதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து படித்து, குரூப்-2 தேர்வில் துர்கா வெற்றி பெற்றார். அந்த வெற்றி, அவரது வாழ்க்கையில் புத்தொளி பாய்ச்சியிருக்கிறது. அவரது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் விடியலைத் தந்திருக்கிறது. தந்தை சேகர் மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக இருந்த நிலையில், குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற துர்கா, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக, தமிழ்நாடு முதலமைச்சரிடமிருந்து பணி ஆணையைப் பெற்றிருக்கிறார். துர்கா கற்றக் கல்வியும் அதில் அவர் பெற்ற வெற்றியும், தூய்மைப் பணியாளர் மகள் என்ற நிலையை மாற்றி, நகராட்சி கமிஷனரின் பெற்றோர் என்ற பெருமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளது.
கல்விரீதியிலும் சமூக ரீதியிலும் காலம்காலமாகப் பின்தங்கிய-ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகக் கடைப்பிடிக்கப்படுவதுதான் இடஒதுக்கீடு எனும் சமூக நீதி. அது எளிய குடும்பங்களுக்குப் பயன்தரவேண்டும் என்பதே இலக்காகும். அதில் ஒரு வெற்றிகரமான இலக்குதான், நகராட்சி ஆணையர் துர்கா. அவரைப் போலப் பலரும் உயர வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகக் கல்விக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லாக் கல்வியுடன், முட்டையுடன் கூடிய சத்துணவு, பாடப்புத்தகங்கள், சீருடை, பேருந்து பயணத்திற்கான பாஸ், சைக்கிள், லேப்-டாப் எனப் பலவும் வழங்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் கடந்த மூன்றாண்டுகளில் மாணவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை செலுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் தனியார்ப் பள்ளிகள் புற்றீசல்கள் போல வளர்ந்திருப்பதும், அவற்றின் கட்டமைப்பு காரணமாக பெற்றோர் பலர் அவற்றைத் தேர்ந்தெடுப்பதும் அதிகரித்து வரும் நிலையிலி, அரசுப் பள்ளிகளின் தரத்தையும் கட்டமைப்பையும் மாணவர் சேர்க்கையையும் மேம்படுத்த அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கணிசமானப் பலனை அளித்து வருகின்றன. அத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு, அவர்களின் திறன் மேம்பாட்டுக்கானப் பயிற்சிகள், போட்டித் தேர்வுகளுக்கானப் பயிற்சி மையங்கள் போன்றவை கடைக்கோடியில் எளிய குடும்பத்தின் பிள்ளைகளுக்கும் பலனளிப்பதை துர்காவின் வெற்றி காட்டுகிறது.
நகராட்சி ஆணையராகப் பணி ஆணையைப் பெற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய துர்கா, “தமிழ்நாடு அரசின் சலுகைகளைப் பயன்படுத்திப் படித்தாலே நல்ல பதவியைப் பெறமுடியும். நானும் அரசுப் பள்ளி, அரசு கல்லூரிகளில் படித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காகத் தயாரானபோது, அரசின் இலவச பயிற்சி மையத்தின் உதவியைப் பெற்றேன். இன்றிலிருந்து எங்கள் தலைமுறை ஒரு மாற்றத்தைக் காணும்“ என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றும் என்று துர்காவைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் தன் அகமகிழ்வைப் பதிவிட்டிருக்கிறார்.
தலைமுறை முன்னேற்றத்திற்கானக் கல்வியை அளிப்பதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என்பதை தேசிய கல்வி நிறுவனங்களின் தரப்பட்டியல் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருப்பது தமிழ்நாடு அரசின் அண்ணா பல்கலைக்கழகம் என அந்த தரவரிசைப் பட்டியல் உறுதி செய்திருக்கிறது. முதல் 100 பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 பல்கலைக்கழகங்களும், இந்தியாவின் முதல் 100 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. கலை-அறிவியல் கல்லூரிகளில் முதல் நூறில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 கல்லூரிகள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.
காலந்தோறும் கல்வி குறித்த மறுஆய்வுகளும், புதிய கோணங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வித்துறை சார்ந்த பிற பிரச்சினைகளையும் கவனத்துடன் பரிசீலித்து, பன்னாட்டுத் தரத்திலான கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டில் பெருக வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பல துர்காக்கள் உருவாக வேண்டும்.