பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையில் திமுக அரசு இணையவில்லை என்பதால் பழிவாங்கும் நோக்கில் இருக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கல்விச்சூழலில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
கல்வி வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக உயர்கல்வியில் முன்னணியில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. தரமான கல்வி நிறுவனங்கள் பட்டியலிலும் ஏறத்தாழ 100ல் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்பதை மத்திய அரசே சொல்லி அறிவித்திருக்கின்றது.
அப்படி இருந்தும், தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாடு இணையவில்லை என்பதற்காக கல்வித்துறையில் தமிழ்நாட்டினை வஞ்சித்து வருகிறது மத்திய அரசு. ’சமக்ரா சிக்ஷா’ கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை பின் தங்கிய நிலையில் வாழும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசியர்களை நேரடியாக பாதிக்கும் என்று கவலை தெரிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ’சமக்ரா சிக்ஷா’ கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
தேசிய கல்விக்கொள்கையின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டையும் இந்த கல்விக்கொள்கையில் இணைக்கவே ’சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்காமல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய கல்விக்கொள்கை-2020ல் உள்ள சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தேசிய கல்விக்கொள்கையில் இணைய அழுத்தம் கொடுப்பது சரியல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிப்பது குறித்து குற்றம்சாட்டியிருக்கிறார். ‘’பிஎம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக்கொள்கையில் இணைய மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கிறது. பள்ளி கல்வித்துறையில் முன்னேறும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு மிகப்பெரும் அழுத்தம் கொடுக்கிறது. நிதி நெருக்கடியை தருகிறது’’ என்று சொல்லும் அவர், ‘’ கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை விட குறைவான நிதியை கொடுக்கிறது மத்திய அரசு. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என்று மத்திய கல்வித்துறை தெரிவிக்கிறது. மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்திருக்கும் போதிலும் தமிழ்நாடு அரசை நம்பியிருக்கும் ஆசிரியர்களுக்கு தடையின்றி ஊதியம் அளிக்கப்படுகிறது. மத்திய அரசு நிதி வழங்காததால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது’’ என்கிறார். ’’தமிழ்நாடு அரசின் கல்விச்சேவையை தடுக்கும் நோக்கில் செயல்படுகிறது மத்திய அரசு’’ என்று குற்றம்சாட்டியிருக்கும் அவர், ’’புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவதாகக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறார்.
மாநில அரசுக்கொள்கையா? மத்திய அரசுக்கொள்கையா? என்கிற இந்த முட்டல் மோதல் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி என்பது மாநில பட்டியலில்தான் இருந்தது. எமெர்ஜென்சி காலத்தில் சில மாநில அதிகாரங்கள் மத்திய அரசுக்கு போனபோது பொதுப்பட்டியலுக்குப் போய்விட்டது கல்வி. பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட அந்தக்கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்கிற குரல் இப்போது தான் கேட்க ஆரம்பித்துள்ளது. இதற்கு முன்பே இந்தக்குரல் ஒலித்தாலும் இப்போது உள்ளது போல் வலிமையாக இல்லை. அதற்கு காரணம், இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகள் இந்த அளவிற்கு மாநில கல்விக்கொள்கைகளில் தலையிடவில்லை. இப்போது மாநில கல்விக்கொள்கையில் மத்திய அரசின் தலையீடு அதிகம் இருப்பதால்தான் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய சுழலில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதும், அது குறித்த விவாதங்களை எழுப்புவதும்தான் மத்திய அரசின் இந்த போக்கிற்கு கடிவாளம் போடுகின்ற வகையில் அமையும்.