இந்தக் கேள்விக்குறிக்கான விடை தமிழ்நாடு அரசிடம் உள்ளது. அதைவிட முக்கியமாக தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது.
50 வயதைக் கடந்த தமிழ்நாட்டு ஆண்கள்-பெண்கள் யாராவது தங்கள் பள்ளிப் பருவத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாகக் கொண்டு சென்று கடலில் கரைத்ததைப் பார்த்திருக்கிறார்களா? அவரவர் தங்கள் வீட்டில் களிமண் பிள்ளையாரை வைத்துக் கும்பிட்டு, மூன்றாவது நாளில் கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ போடுவதுதான் தமிழ்நாட்டின் வழக்கம். 40 அடி, 60 அடி விநாயகர் சிலை ஊர்வலமும் அதன் தொடர்ச்சியான கலவரமும் தமிழ்நாட்டுக்குள் யாரால் வந்தது?
அண்ணே, அம்மா, ஐயா, தம்பி, சார், பிரதர், மேடம் என்பதுதான் 30 ஆண்டுகள் முன்புவரை தன்னுடன் சேர்ந்து பணியாற்றுபவர்களை அழைப்பது வழக்கம். இப்போது பல பேர் ‘வாங்க ஜி’, ‘சொல்லுங்க ஜி’ என்று அலுவலகத்தில் அழைக்கிறார்களே இது எப்போது வந்தது? யாரால் வந்தது?
கார்த்திகைத் திருநாள் என்பது தமிழர்களுக்கே உரிய திருநாள். பிரதமர் மோடியின் குஜராத்தில் யாராவது கார்த்திகை நாளில் அகல் விளக்கு ஏற்றுகிறார்களா? தமிழர்கள் கார்த்திகைத் திருநாளில் அகல்விளக்கு ஏற்றுவார்கள். வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்த பொரி செய்து படைப்பார்கள். நெருப்பு பறக்க கார்த்திகைப் பொரி (மாவிலி) சுற்றுவார்கள். கோயில்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். திருவண்ணாமலை போன்ற திருத்தலங்களில் தீபம் ஏற்றுவார்கள். அதனைக் காண பக்தர்கள் குவிவார்கள். இதுபோன்ற எந்தவொரு வழிபாட்டு முறையும் கார்த்திகைத் திருநாளில் வடமாநிலங்களில் கிடையாது.
அவரவர் வீடுகளில் கொழுக்கட்டையுடன் வழிபடப்பட்ட பிள்ளையார் சதுர்த்தி, தமிழ்நாட்டுக்கே உரிய தனித்தன்மையுடன் கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் விழா, வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றிக் கொண்டாடப்படும் கார்த்திகைத் திருநாள் இவற்றிற்கும் சனாதன-வேதமந்திரங்கள் அடிப்படையிலான வடமாநிலப் பண்பாட்டிற்கும் என்ன சம்பந்தம்? நம்முடைய தமிழர்களின் வீடுகளில் சமஸ்கிருத மந்திரம் ஓதும் கணபதி ஹோமம் எப்படி வந்தது? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் கலந்த தமிழ்த் திருமணப் பண்பாட்டில் புரோகிதர்களை வைத்து யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதும் வழக்கம் எப்போது நுழைந்தது?
இந்த சிந்தனை இல்லாமல் போன காரணத்தினால்தான் தமிழர்களின் பண்டிகைகளை மதவாத சக்திகள் தங்கள் வசமாக்க முயற்சிக்கின்றன. திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழில் இருந்து கிளைத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சமஸ்கிருதம் பெருமளவில் கலந்த காரணத்தால் அவை தனது தனித்தன்மையை இழக்க நேரிட்டன. ஆனால், தமிழ் தனித்தியங்கும் செம்மொழியாகத் திகழ்கிறது.
தமிழர் பண்பாட்டையும், தமிழ் மொழியின் தனித்தன்மையையும் சிதைக்கும் நோக்கத்துடனேயே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. சமஸ்கிருத மொழிக்கு பல்லாயிரம் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் முதல் செம்மொழியானத் தமிழுக்கு குறைந்த நிதியையே ஒதுக்குகிறது. அதே நேரத்தில், புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி செய்கிறது. இந்தியை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தரமுடியாது என மறுத்து வஞ்சகம் செய்கிறது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மக்கள் வழிபடுவது தமிழ்க் கடவுளான முருகனை. வடமாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடும் பா.ஜ.க., தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் என்று கோஷமிட்டு ஆன்மீகத்தை அரசியலாக்க முயற்சி செய்கிறது. வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், மலையில் உள்ள தர்கா அருகே உள்ள தூணில் விளக்கேற்ற வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்தது.
2014ஆம் ஆண்டில் இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு மாறாக, தனி நீதிபதி அளித்த தீர்ப்பை முன்வைத்து பா.ஜ.க.வின் பரிவாரங்கள் சர்ச்சை செய்தது முழுக்க முழுக்க கலவர அரசியலுக்காகத்தான். திருப்பரங்குன்றம் மீதும் மதுரை மீதும் பா.ஜ.க.வினருக்கு உண்மையான அக்கறை இருந்தால், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஒரே திட்டமான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை முடித்திருக்க வேண்டும். மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டம், மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து முழுமையான சர்வதேச விமான நிலையமாக மாற்றியிருக்க வேண்டும். இவை எதையும் பாஜகவினர் செய்யாமல் வெறும் மதவாத அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
மதுரையின் வளர்ச்சிக்கும் மதுரை மக்களின் நலனுக்குமான எந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல், மதநல்லிணக்கத்துடன் வாழும் மதுரையில் மதரீதியான கலவரத்தைத் தூண்டுவதற்கு நீதிமன்றம் வரை செல்வாக்கைக் காட்டும் பா.ஜ.க.வால், நல்லிணக்கத் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
