படித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வேண்டும் என்பது மாணவப் பருவத்தில் பலருக்கும் விருப்பம் ஏற்படும். அதுவே இலட்சியமாக மாறும். அந்த இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் கடுமையாக உழைக்க வேண்டும். கவனமாகப் படிக்க வேண்டும். மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தக் கூடிய யு.பி.எஸ்.சி.யின் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, அதன்பிறகு நேர்காணல் எனப் பல கட்டங்களைக் கடந்து வெற்றி பெற்றால்தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற இந்திய குடிமைப்பணி அதிகாரிகளாகப் பொறுப்பேற்க முடியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி, முனைவர் பட்டம் போன்றவற்றில் பிற மாநிலங்களைவிட நமது மாநில மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். அதே நேரத்தில், யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் ஒரு தேக்கம் நீடித்து வந்தது. டெல்லி, பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களைப் போலவோ, கேரளா போன்ற தென்மாநிலத்தைப் போலவோ தமிழ்நாட்டில் யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆர்வம் காட்டுபவர்கள் குறைவாகவும், அதில் வெற்றி பெறுபவர்கள் இன்னும் குறைவாகவும் இருக்கக்கூடிய சூழல் இருந்தது. இது குறித்து, கல்வியாளர்களும் பொதுநலச் சிந்தனையாளர்களும் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர்.
2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு, யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெறுவதற்கேற்ப ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தைத் தொடங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர். மாணவர்களின் பள்ளி-கல்லூரிக்கல்வியைக் கடந்து வேலை வாய்ப்புகளுக்கேற்ற திறன் பயிற்சிகளை வழங்கும் இந்த நான் முதல்வன் திட்டம், ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். போன்ற யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான செயல்பாடுகளையும் மேற்கொண்டது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதுவதற்கு தமிழ்நாடு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களின் தேர்ச்சி விகிதமும் உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 136 பேர் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த 2025ஆண்டில் 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2024ஆம் ஆண்டைவிட 13.97% கூடுதலாகும். இந்த 155 பேரில் 85 பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள். அதாவது, 54.84% என பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்.
யு.பி.எஸ்.சி. தேர்வுக்கென தனியார் பயிற்சி மையங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தமிழ்நாட்டிலும் புகழ்பெற்ற தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி. முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, தனியார் பயிற்சி மையங்கள் தங்களிடம் பயின்ற மாணவர்களின் படங்களை வெளியிட்டுப் பெருமை கொள்ளும். தங்கள் மையத்தின் பயிற்சித் திறன் குறித்த அந்த விளம்பரங்கள், பயிற்சிக் கட்டணம் செலுத்தி பயிலக்கூடிய வசதியுள்ள மாணவர்களுக்குப் பயன்படும். அதே நேரத்தில், அதிகக் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற இயலாத மாணவர்கள், புத்தகங்களைத் தேடி வாங்கியும், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவற்றில் உள்ள நூல்களைப் பயன்படுத்தியும் சொந்தமாக படித்து, இயன்றவரை மதிப்பெண்கள் பெறுவார்கள். இந்த ஏற்றத்தாழ்வை மாற்றிடும் வகையில்தான், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் செயல்படுகிறது.
நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து உதவித் தொகையுடன், மாநில அரசின் சார்பிலான சிறந்த பயிற்சியையும் பெற்று, தங்கள் இலட்சியக் கனவான ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் பொறுப்புகளுக்கு செல்லக்கூடிய பெரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கேற்ற பயிற்சிகளும் வழங்கப்படுவதால், தமிழ்நாட்டு மாணவர்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் உதவித்தொகையுடனும், உறுதுணையான பயிற்சியுடனும் மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளாகப் பணியாற்றும் வாய்பைப் பெறுவது, தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மைக்கான முன்னெடுப்பாகவும் அமையும்.
கல்வி என்பது காலந்தோறும் சீரமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகளுடன் கூடியது. அதைத் தமிழ்நாடு அரசு சரியாக உணர்ந்து யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள் நலனில் காலத்திற்கேற்ற கவனத்தை செலுத்தி வெற்றி பெற வைத்திருக்கிறது.
