
அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காப்பதற்கான உயர்ந்த இடமாகவும், ஜனநாயகத்தின் தூணாகவும் இருப்பது நாடாளுமன்றம். அங்கே ஆட்சியதிகாரம் செய்யக்கூடியவர்கள் சட்டத்தைத் தங்கள் வசதிக்கேற்ப வளைக்கும்போது நீதிமன்றம் ஒன்றே இறுதி நம்பிக்கையாக அமைகிறது.
முந்தைய ஆட்சிக்காலங்களில், குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைந்த காலங்களில் தங்களுக்கு எதிரான மாநில அரசுகளை 356வது சட்டப்பிரிவைக் கொண்டு கலைப்பது என்கிற ஜனநாயகப் படுகொலை நடந்தது. நேரு காலத்தில் தொடங்கி இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகிய பிரதமர்கள் மட்டுமின்றி, ஜனதா கட்சியின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயும் அந்தப் பிரிவைப் பயன்படுத்தி ஆட்சிகளைக் கலைத்தனர். உலகிலேயே ஜனநாயகத் தேர்தல் முறையில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசான கேரளா மாநிலத்தின் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான அரசுதான் 356வது பிரிவுக்குப் பலியான முதல் மாநில அரசு. கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு இரண்டு முறை அந்தப் பிரிவுக்கு பலியாகியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் வடமாநிலங்களில் உள்ள பல அரசுகளும் இப்படித்தான் பலியாகின.
கர்நாடகாவின் முதல்வராக இருந்த ஜனதாதளம் கட்சியின் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை தனது ஆட்சியைக் கலைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், 356வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைப்பதற்கு எதிரான கடுமையானத் தீர்ப்பை வழங்கியது. அதன் பிறகே மாநில அரசுகள் 5 ஆண்டுகள் முழுமையாக ஆளும் நிலைமை உருவானது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, தனக்கு எதிரான மாநில அரசுகளை நேரடியாக கலைக்க முடியாது என்பதால் ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முறையை உண்டாக்கியது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலங்கள், ஆம் ஆத்மி ஆட்சி செய்த டெல்லி, திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளா, தி.மு.க .ஆட்சி செய்யும் தமிழ்நாடு என பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும், பா.ஜ.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட கவர்னர்களை நியமித்து, மாநில அரசின் நிர்வாகத்திலும், அன்றாட நடைமுறையிலும் அவர்களைத் தலையிடச் செய்து, போட்டி அரசாங்கம் நடத்துகின்ற வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் செல்வி.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த கடைசி காலத்திலேயே வித்யாசாகர் என்ற கவர்னர் மூலம் இந்த வேலையைத் தொடங்கிய மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, எடப்பாடி பழனிசாமி காலத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மூலமாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி மூலமாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கவர்னரைக் கொண்டு போட்டி அரசாங்கம் நடத்தும் வேலைகளை செய்தது மோடி அரசு. மாநிலத்தை ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோதே கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் நிர்வாக அத்துமீறலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. ஆளுங்கட்சியானதும் ஆர்.என்.ரவியின் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம், தமிழ் வெறுப்பு பேச்சுகள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை, சட்டமன்றத்தில் ஆளுநரை உரையில் இடைச்செருகல் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்த்து நேரடியாகவே விமர்சனம் செய்தது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு உள்பட பல தீர்மானங்களை நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும், அவற்றைத் திருப்பி அனுப்புவது, இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பினால் கிடப்பில் போடுவது, குடியரசு தலைவருக்கு அனுப்புவது, நிராகரிப்பது என சட்டம் வழங்கியுள்ள வரையறைகளுக்கு எதிராகவே ஆளுநர் செயல்பட்டு வந்தார். இந்த ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க அரசு.
அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆளுநர் செயல்படுகிறார் எனத் தமிழ்நாடு அரசு வாதாட, ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய பா.ஜ.க அரசு வாதாடியது. பிப்ரவரியில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “ஆளுநரின் செயல் சட்டவிரோதம்” என்றும், “மசோதாக்களை நிராகரித்தது செல்லாது” என்றும் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு தமிழ்நாடு ஆளுநருக்கான தீர்ப்பு மட்டுமல்ல, இந்தியாவில் தற்போதுள்ள பா.ஜ.க. ஆளுநர்களுக்கும் எதிர்காலத்தில் ஆளுநராகக் கூடியவர்களுக்குமான கடிவாளத் தீர்ப்பு.
இந்த தீர்ப்பில் இடம்பெற்றுள்ள பத்து தீர்மானங்களும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக நிர்வாகங்கள் தொடர்பானவை. ஜனநாயக ஆட்சி முறையில் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினை முடக்க நினைத்த ஆளுநர் ஆர் என் ரவியின் அராஜக செயல்பாடுகள் தவிடு பொடியாகி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அவர் பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார். ஜனநாயக பாதுகாவலனாகவும் திகழ்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாத்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கைப் போல, தமிழ்நாட்டின் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கும் இந்திய அரசியல் வரலாற்றின் திருப்புமுனையாக அமையும்.
மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றம் இருப்பதும், அதனை சரியான முறையில் அணுகக்கூடிய வழிமுறையைத் தமிழ்நாடு கடைப்பிடித்து இந்தியாவுக்கே வழிகாட்டியிருப்பதும் மக்களாட்சியின் வெற்றி.
t0zrbf