பெரும்பாலான இளைஞர்களுக்கு விளையாட்டு என்றால் கிரிக்கெட்தான். சென்னை முதல் குக்கிராமம் வரை கிரிக்கெட் ஆட்டத்தை இளைஞர்கள் ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியிலும் நடராஜன் போன்ற தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்று திறமையை வெளிப்படத்தியிருக்கிறார்கள். விளையாட்டு என்பது கிரிக்கெட் மட்டுமல்ல.

உலக அளவில் பல விளையாட்டுப் போட்டிகள் உண்டு. அதில் திறமையான இந்திய-தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்று சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். கால்பந்து, டென்னிஸ், பேஸ்கட்பால் போன்ற புகழ் பெற்ற விளையாட்டுகளும், தட-களப் போட்டிகளும் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டிகள் போன்றவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கெடுப்பதும், பதக்கம் பெறுவதும் கவனத்தை ஈர்க்கும்.
பஞ்சாப் போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அந்தளவுக்கு விளையாட்டு ஆர்வமும் பங்கேற்பும் சில ஆண்டுகளுக்கு முன் வரை குறைவாகத்தான் இருந்தது. அண்மைக்காலமாக அந்த ஆர்வம் அதிகரித்து வருவதுடன், அதற்கேற்ற களமும் பயிற்சிகளும் கிடைத்து வருகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் புதுப்பித்துக் கட்டப்பட்ட நேரு விளையாட்டரங்கம் சர்வதேச தரத்திலானப் போட்டிகளை நடத்துவதற்கு தகுதி பெற்றதாக அமைந்தது. அதுபோலவே ஹாக்கி ஸ்டேடியம், டென்னிஸ் கோர்ட் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டன.
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்பிலான ஊக்கம் கிடைத்தது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பதக்கம் வென்றார் தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சார்ந்த சாந்தி என்ற வீராங்கனை. அவருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசின் சார்பில் இலட்சக்கணக்கான பரிசுத் தொகையை அறிவித்தார் முதலமைச்சர். ஆனால், சாந்தியின் ஹார்மோன்களில் ஆண்த்தன்மை அதிகமாக இருப்பதாகப் பரிசோதனை முடிவுகள் தெரிவிப்பதாகச் சொல்லி, அவருக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை காமன்வெல்த் போட்டி நிர்வாகம் திரும்பப் பெற்று விட்டது. எளிய குடும்பத்தில் பிறந்து சர்வதேச அளவிற்குச் சென்ற சாந்திக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்த நிலையில், தமிழ்நாடு அரசின் பரிசும் திரும்பப் பெறப்படுமோ என்ற அச்சமும் குழப்பமும் ஏற்பட்டது.
“ஓடியது சாந்தியின் கால்கள்தானே” என்று சொல்லி அவருக்குரிய பரிசுத்தொகைய உறுதி செய்தார் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. அது சாந்திக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் ஊக்கத்தை அளித்தது. மல்யுத்தம், குத்துச்சண்டை, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்-வீராங்கனைகளும் அரசின் ஆதரவைப் பெற்றனர்.
2021ல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு சர்வதேச போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவதில் அக்கறை செலுத்தப்பட்டு செஸ் ஒலிம்பியாட், ஹாக்கி டோர்னமென்ட் , ஃபார்முலா கார் ரேஸ் போன்றவை நடத்தப்பட்டன. முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் ஆகியோருக்கெனத் தனித்தனிப் பிரிவில் ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவதால், மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு நிலையிலும் புதிய வீரர்கள் உருவாகி வருகிறார்கள்.
சர்வதேச அளவிலான பல விளையாட்டுகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் தனித்த அடையாளமாக உள்ள விளையாட்டு, கபடி. ஊர்தோறும் கபடி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. முதல்வர் கோப்பையிலும் கபடிக்கு தனி இடம் உண்டு. இதில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா என்பவர் மிகச் சிறப்பாகத் தன் திறமையை வெளிப்படுத்தி தனது அணிக்கு வெற்றிகளைக் குவித்தார். அண்மையில் பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளைஞர் கபடி போட்டியில் கார்த்திகா மிகச் சிறப்பாக விளையாட, இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. அதுபோலவே ஆண்கள் பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்றது. இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடுவூரைச் சேர்ந்த அபினேஷ் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த இரண்டு தமிழ்நாட்டு வீரர்களும் தாயகம் திரும்பிய நிலையில், முதலமைச்சரும் விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சரும் நேரில் அழைத்துப் பாராட்டியதுடன் இருவருக்கும் தலா 25 இலட்ச ரூபாய் பரிசுத் தொகை அளித்திருக்கிறார் முதலமைச்சர். கபடி விளையாட்டில் இது மிகப் பெரிய பரிசுத் தொகை என்பதுடன், கபடியில் பங்கேற்கும் அனைவருக்கும் இது ஊக்கம் தரும்.
விளையாட்டு வீரர்களைப் போற்ற வேண்டிய தருணம் இரு. செஸ் சாம்பியன் குகேஷூக்கு கோடிக்கணக்கில் கொடுத்த தமிழ்நாடு அரசு, கபடிக்கு கம்மியாக கொடுப்பதா, சாதி பார்த்து, மொழிபேதம் பார்த்து கொடுப்பதா என சில புலம்பல்கள் கேட்கின்றன.
சர்வதேச அளவிலான போட்டிகள், ஆசிய அளவிலான போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள் இவற்றில் பங்கேற்று வெற்றி பெறுகிறவர்களுக்கான பரிசுத் தொகை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுதான். பரிசுடன், வீடு, வேலைவாய்ப்பு போன்றவையும் அரசுத் தரப்பில் வழங்கப்படுகிறது.
விமர்சிப்பவர்களோ விளையாட்டுப் பற்றிக்கூடத் தெரியாத அறிவுச் சிறுவர்கள் என்று தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
