
யாருக்கு அதிகாரம்? என்ற போட்டியில் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளால் அதகளம் ஆனது எம்.ஜி.ஆர். மாளிகை. அதன் பின்னர் நடந்த சம்பவங்களால் அதிமுகவின் அதிகாரத்தை முழுவதுமாக கைப்பற்றினார் இபிஎஸ்.
ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டனர். கொடி, சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த முடியாதபடியும் செய்துவிட்டார் இபிஎஸ்.
அப்படி இருந்தும் அதிமுகவின் சின்னம் இரட்டை இலைக்கு உரிமை கோரி சட்டப்போராட்டம் நடத்தினர். அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் சின்னத்திற்கு எப்படி உரிமை கோர முடியும்? என்ற இபிஎஸ் அலட்சியமாக இருந்து வந்த நிலையில், திடீரென்று ஓபிஎஸ் அணியின் கோரிக்கைக்கு வலு சேர்ந்திருக்கிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருக்கான பதவிக்காலம் இன்னும் இருப்பதால் அதிமுக கொடிக்கு உரிமை கோரி வந்தார் ஓபிஎஸ்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓபிஎஸ். அவர்தான் கட்சியை வழி நடத்தி வந்தார். இடையில் 2017 பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை. அதனால் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்க்கு ஒதுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதமாக இருந்தது.
இரட்டை இலை யாருக்கு? என்ற இந்த விவகாரம், ஒரே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பிரிவினரும், தற்போது நிபந்தனைகளின் பேரில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரிவினரும் உரிமை கோரும் பிரச்சனை.
நீதிமன்ற உத்தரவின்படி, எடப்பாடியைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்ட நிலையில், இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமை அவருக்குத்தான் உள்ள நிலையில் ஓபிஎஸ் இந்த விவகாரத்தில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றே பலரும் சொல்லி வந்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை முடிகின்ற வரையிலும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரே இல்லை என்று கூறி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கு முடியும் வரையிலும் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக்கூடாது என்ற சூரிய மூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில் இபிஎஸ் தரப்பின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக நீதியின் கண்கள் திறக்கப்பட்டிருக்கிறது என்று இபிஎஸ்க்கு எதிரானவர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது, ‘அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான உள்கட்சி விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்’ என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. ‘’ஒட்டுமொத்த தொண்டர்களின் உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது இந்த தீர்ப்பு’’ என்கிறார் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் ஓபிஎஸ் கை ஓங்கியிருக்கிறது. இபிஎஸ் கை பலமிழந்துள்ளது. இதையடுத்து இரட்டை இலை யாருக்கு? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில்.
ஆணையத்தின் முடிவு தனக்கு எதிராக வரும் என்பதால்தான் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை விசாரிக்கக்கூடாது என்று இபிஎஸ் இடைக்காலத் தடை வாங்கினார். ஆனால் அந்த தடையை நீக்கி, தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.
அதிமுக முன்னாள் எம்.பி. க்கள் கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் செய்த மேல்முறையீட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி அதிகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமே இல்லை. இல்லாத அதிகாரத்தை இருப்பதாக சொல்கிறது ஆணையம் என்று ஆவேசப்பட்டு வருகிறது இபிஎஸ் தரப்பு.

கட்சிகளும், தலைவர்களும் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், தேர்தல் ஆணையம் விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாலும், தேர்தல் ஆணையத்தின் முடிவு இபிஎஸ்க்கு சாதகமாக அமையுமா? இல்லை, பாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பாராட்டு விழா மேடை மற்றும் அழைப்பிதழ்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவைப் புறக்கணித்துவிட்டு தான் தான் அதிமுகவை உருவாக்கியது மாதிரி தன்னை மட்டும் மேடை முழுவதும் இபிஎஸ் அலங்கரித்துக் கொண்டதால் அந்த விழாவைப் புறக்கணித்த செங்கோட்டையன், அடுத்து இபிஎஸ்சை புறக்கணித்துவிட்டு கட்சியை நடத்த ஆலோசனை நடத்தி வருகிறார். இது இபிஎஸ்க்கு விழுந்த முதல் அடி என்றால், சின்னம் தொடர்பான தீர்ப்பு இரண்டாவது அடியாக விழுந்திருக்கிறது.

சின்னத்தைக் கைப்பற்றுவதற்காக ஓபிஎஸ், சசிகலா, பாஜக, டிடிவி ஆகியோருடன் சமரசம் செய்து கொள்வாரா? இல்லை, சின்னம் பறிபோனால் ஓபிஎஸ், டிடிவி மாதிரி தனிச்சின்னத்தில் போட்டியிடுவாரா இபிஎஸ்? இபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற சலசலப்பு அதிகரித்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில்.