அரசுமுறை பயணமாக நேற்று(04/10/2024) இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதிய அதிபராக பதவியேற்ற அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து, இலங்கையின் 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தி தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் பிரச்சினையை எழுப்பினார்.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பராமரிக்கும் அதே வேளையில், சமத்துவம், நீதி, கண்ணியம், மற்றும் அனைத்து சமூகங்களின் உரிமைகளுக்கும் இந்தியாவின் ஆதரவை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தவும் அந்நாட்டு அதிபரிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் அந்நாட்டு அரசியலமைப்பில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் வகையில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டு போலீஸ் மற்றும் நில அதிகாரங்கள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அது போதுமான தீர்வாகாது என தமிழ் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், தற்போது வரை இலங்கை அரசானது அதனை நடைமுறைப்படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இலங்கையின் தற்போதைய அதிபர் அனுரகுமார திஸாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி கட்சி இந்த 13-வது சட்ட திருத்தை அமல்படுத்துவதற்கு எதிராக வரலாற்று ரீதியாக கடுமையான நிலைப்பாட்டை கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை
“இலங்கையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் தொடர்பான கவலைகளை” ஜெய்சங்கர் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை பலமுறை தாக்கி கைது செய்துள்ளனர், சமீபத்திய நாட்களில் மட்டும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களையும் அவர்களின் படகுகளையும் முன்கூட்டியே விடுவிக்கவும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான அபராதத்தை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாகவும், இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.