
தமிழ்நாட்டில் மது குடிப்பவர்கள் தள்ளாடுகிறார்களோ இல்லையோ, மது விலக்கு கொள்கை என்பது எப்போதும் தள்ளாட்டம்தான். ராஜாஜி ஆட்சிக்காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது. காமராஜர் ஆட்சிக்காலம் மற்றும் அண்ணா ஆட்சிக்காலம் வரை மதுக்கடைகள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவில்லை. அதற்காக மது விற்பனையே இல்லை என்றோ, மது குடிப்பவர்களே இல்லை என்றோ சொல்ல முடியாது. பெர்மிட் என்கிற அனுமதி முறை மூலம் பெரிய மனிதர்களும், வாய்ப்புள்ளவர்களும் மது அருந்தினர். அந்த வசதி இல்லாதவர்தகள் சாராயம், கள்ளச்சாராயம் போன்றவற்றை நாடினர்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் ஒவ்வொரு ஆண்டும் போடப்பட்ட சாராய வழக்குகளின் எண்ணிக்கை, சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. கள்ளச்சாராய பலிகள் குறித்த செய்திகளும் வெளியாகின. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் சாராயம் வருவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. அண்ணா ஆட்சிக்காலத்திலும் கள்ளச்சாராய சாவு ஏற்பட்டது. இதன்பிறகே, கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு, மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நாடு முழுவதும் மதுவிலக்கு நடைமுறைக்கு வருவதுபோன்ற சட்டவிதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்தார். மத்திய அரசு அதற்குத் தயாராக இல்லை. எனினும், இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, மதுபானக் கடைகளை மூடியது தி.மு.க. அரசு.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின் தொடக்கத்தில் மதுவிலக்கைக் கடைப்பிடிப்பதில் உறுதி காட்டப்பட்டது. பின்னர், அது மெல்ல தளர்ந்தது. கூட்டுறவு அங்காடிகளிலேயே மதுபானங்களை விற்பனை செய்வதற்கு என்று தனிப் பகுதி உருவானது. கள், சாராயக் கடைகளையும் திறந்தார்கள். இந்த நிலையில், உயர் ரக மதுபானங்களான பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஒயின் போன்ற வகைகளைக் கொள்முதல் செய்து விற்பதற்காக எம்.ஜி.ஆர். ஆட்சியில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனும் டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
எந்தெந்த வகை மதுபானங்களை எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, தனியார் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வழங்குவது என்பதை டாஸ்மாக் நிறுவனம் பார்த்துக்கொண்டது. அது அரசு நிறுவனம் என்பதால், மதுபான உற்பத்தியாளர்கள் பலரும் ஆட்சியாளர்களின் கடைக்கண் பார்வைக்காகத் தங்களால் ஆனதை செய்தனர். தேர்தல் களத்தை ஆளுங்கட்சி எதிர்கொள்வதற்கு டாஸ்மாக் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது.
டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்களை வாங்கி சில்லறை விற்பனை கடை நடத்தியவர்கள் அதற்கான உரிமம் பெற வேண்டும். இதற்கு ஏலமும் நடக்கும். இந்த ஏலத்தில் தனியார் கடை பெருமுதலாளிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு, ஏலத் தொகையை குறைத்து எடுத்து, அரசுக்கு நட்டம் ஏற்படுத்தி வந்தார்கள். அதனால், டாஸ்மாக் நிறுவனமே சில்லறை மதுபானக் கடைகளை நடத்தும் என்ற முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்தார். அதன்பிறகே, டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் வந்தன.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசு அனுமதியுடன் சாராய பாட்டில் விற்பனை செய்யப்பட்டபோது, எத்தனை சாராய பாட்டிலோ ஆகிறதோ, அதன் மூடிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஆளுந்தரப்பிற்கு வசூல் நடந்தது. டாஸ்மாக் மூலம் உயர்வகை மதுபானங்கள் கொள்முதல் தொடங்கப்பட்ட பிறகு, மதுபான ஆலை அதிபர்களின் கவனிப்பில் ஆளுந்தரப்பு தெம்பாக இருந்தது. டாஸ்மாக் சில்லறை விற்பனை நடைமுறைக்கு வந்தபிறகு, பார் ஏலம், மாதாந்திர வசூல், பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பது உள்பட பலவித வருமான வழிகள் உருவாகிவிட்டன.
தங்க நகைக் கடன் குறித்து மத்திய அரசு ஒரு முடிவெடுத்தால் எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள், கூட்டணி வைக்கப் போகும் புதிய கட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் அது குறித்த கருத்தைத் தெரிவிக்கின்றன. எதிர்ப்பைப் பதிவு செய்கின்றன. டாஸ்மாக் மதுபான விலை உயர்த்தப்பட்டால் எந்தக் கட்சியும் வாய் திறக்காது. அது பற்றி பேசினால், மக்களிடம் கெட்ட பெயர் வரும், பெண்களின் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்ற தயக்கம் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. அதனால், ஆளுந்தரப்பில் யார் இருந்தாலும் டாஸ்மாக் விவகாரத்தில் பெரிய எதிர்ப்புகள் வருவதில்லை.
தற்போதைய வழக்குகள், விமர்சனங்கள் கூட அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான். குற்றம்சாட்டுபவர்கள் ஆட்சிக்கு வரும்போதும் இதுவே தொடரும். அல்லது இதைவிட சிறப்பான ஒரு வசூல் நடைமுறை உருவாகும்.