
வரம்பு மீறி நடப்பதாகச் சொல்லி டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும்.
சென்னை உயர்நீதிமன்றமோ இந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு அல்லாமல், அமலாக்கத்துறைக்கு விசாரணைக்கு அனுமதி அளித்தும், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு.
இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று நடந்த விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஏ.ஜி.மசிஹ் அமர்வு முன்பு நடந்த விசாரணையில், தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்தி வாதிட்டனர்.

‘’2014 -21 இல் டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் குறித்து 41 வழக்குகளை பதிவு செய்துள்ளது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த வழக்குகள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் நடந்து வருகிறது. ஆனால் 2025இல் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துக்கொண்டு சோதனை நடத்துகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது இந்த விசாரணையில் அமலாக்கத்துறை ஏன் தலையிட்டது?
சோதனையின் போது அதிகாரிகளின் தனியுரிமை பறித்து, அவர்களின் செல்போன்களையும் பறித்துள்ளது அமலாக்கத்துறை. டாஸ்மாக் அதிகாரிகளின் செல்போன்களில் உள்ள தகவல்களை அமலாக்கத்துறை எடுத்துச்சென்றது தனிநபர் உரிமை மீறல்’’ என்ற வாதத்தை தமிழ்நாடு அரசின் சார்ப்பிலான வழக்கறிஞர்கள் முன் வைத்தபோது, ‘’டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை நியாயமாக நடந்து வருகிறது’’ என்று மத்திய அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ‘’டாஸ்மாக் நிர்வாக வழக்கை ஏன் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். இதன் மூலம் அமலாக்கத்துறை வரம்பு மீறி இருக்கிறது.
முறைகேடு நடந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது விசாரணை நடத்தலாம். தனி நபர் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? எந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது?
அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது அமலாக்கத்துறை. கூட்டாட்சி அமைப்பை சிதைத்திருக்கிறது அமலாக்கத்துறை’’ என்று உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சம்மட்டி அடி அடித்திருக்கிறது. டாஸ்ஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீஸ் மீது அமலாக்கத்துறை அளிக்கும் பதிலைப் பொறுத்துதான் உச்ச நீதிமன்றத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் அமைய உள்ளது.
இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘’பிளாக் மெயில் அமைப்பைப் போல் செயல்படும் அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசு இனிமேலாவது அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது திமுக அரசின் மீது களங்கம் சுமத்த மத்திய அரசு செய்த செயல்தான் என்ற குற்றச்சாட்டினை மறுத்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். ‘’ அமலாக்கத்துறையின் சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள் என்று சொல்கிறார்.