உலகம் வியக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு முக்கியமான பிரிவை தமிழர் ஒருவர் ஆண்டு வருகிறார். அவர் அசோக் எல்லுசாமி.
உலகின் முன்னணி மின்னணு கார் தயாரிக்கும் நிறுவனம் டெஸ்லா. எலான் மஸ்க்கின் இந்த டெஸ்லா நிறுவனம் வெறும் 20 ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையினையும் தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் பெட்ரோல், டீசல் கார்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் முயன்று வரும் நிலையில், டெஸ்லாவின் மின்னணு கார் தயாரிக்கும் நிறுவனம் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.
எலெக்ட்ரிக் கார்களின் பிராண்டுகளுக்கு டெஸ்லா கார்கள்தான் முன்னோடியாக இருக்கின்றன. எலெக்ட்ரிக் கார் தயாரிக்கு நிறுவனம் என்பதற்காக மட்டும் டெஸ்லா நிறுவனம் புகழ்பெற்று விளங்கவில்லை. எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தனித்தன்மை உள்ளதால்தான் டெஸ்லா புகழ் உச்சத்தில் உள்ளது.
அந்த தனித்தன்மை என்னவென்றால், விமானத்தில் இருப்பது போலவே டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களிலும் ஆட்டோ பைலட் சேவை உள்ளது.
கூகுள் உள்பட பல டெக் சேவை நிறுவனங்கள் ஆட்டோபைலட் கார்களை தயாரிப்பதில் ஆர்வம் கொண்டு, அதில் பல்லாண்டுகள் முயன்று வந்தாலும் கூட, டெஸ்லா நிறுவனம்தான் குறுகிய காலத்திலேயே இத்துறையில் சாதித்துள்ளது.
இந்த வெற்றிக்கு காரணம் யார் என்பதை டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் இதுகுறித்து ஒரு நிகழ்வில் பேசும்போது, ‘’டெஸ்லாவின் ஆட்டோபைலட் சேவை பற்றி பாராட்டும் மக்கள் என்னையும், ஏ1 பிரிவு தலைவரான ஆண்ட்ரேஜ்ஜையும் குறிப்பிடுவார்கள். உண்மையில் இந்த பாராட்டுகளுக்கு சொந்தக்காரர் அசோக் எல்லுசாமிதான். அவர்தான் ஆட்டோபைலட் இன் ஜினியரிங் பிரிவின் தலைவர். அசோக் எல்லுசாமியின் தலைமையில்தான் டெஸ்லா கார்களுக்கான ஆட்டோ பைலட் சேவை உருவாக்கப்பட்டது. இப்போது அது செயல்முறைக்கும் வந்துள்ளது’’என்று சொல்லி பெரிமிதப்பட்டுக்கொண்டார்.
ஆட்டோ பைலட் சேவை மற்றும் ஸ்டார்ஷிப் இன் ஜின் தான் நாங்கள் சந்திக்கும் பெரும் சவால். ஆட்டோ பைலட் ஏ1 அணியில் பல புத்திசாலிகள் இருக்கிறார்கள். இதில் அசோக் எல்லுசாமிதான் டெஸ்லாவின் ஆட்டோபைலட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.
இந்த டெஸ்லா நிறுவனத்தின் முக்கியமான ஒரு பிரிவினை வகிக்கும் இந்தியர் அசோக் எல்லுசாமி தமிழர் என்பதில் தமிழ்நாட்டிற்கு தனிப்பெருமை.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் சரளமாக பேசும் அசோக் எல்லுசாமி 2005-2009ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ECE பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர், சென்னை WABCO வாகன கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக இரண்டறை வருடங்கள் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் அமெரிக்காவில் கார்கி மெலான் பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இதன் பின்னர் வோக்ஸ்வாகன் எலெக்ட்ரானிக் ரிசர்ஸ் லேப்பில் ஆராய்ச்சி பயிற்சியாளராக 8 மாதங்கள் பணிபுரிந்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டில் டெஸ்லா ஆட்டோபைலட் பிரிவில் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்த அசோக் எல்லுசாமி 8 வருடங்களில் அதீத உழைப்பினால் டெஸ்லா ஆட்டோ பைலட் பிரிவின் தலைவராக உச்சத்திற்கு சென்றுள்ளார்.