
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக மாறிவிட்டது என்று விமர்சகர்கள் சொல்வது உண்டு. காரணம், அந்தளவுக்கு அந்த விளையாட்டின் மீதான ரசிகர்கள் பற்று ஒரு கட்டத்தில் வெறியாகிவிட்டதன் விளைவுதான் அது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடந்தால், அது விளையாட்டு என்ற நிலையைத் தாண்டி, போர் போல சித்திரிக்கும் போக்கு மதவெறியர்களால் உருவாக்கப்பட்டு, ரசிகர்களின் மனதிலும் நிலைத்து நின்றது. கிரிக்கெட்டில் இந்தியாவை ஆதரிப்பதுதான் உயர்வான தேசபக்தி என்கிற அளவிற்கு மனநிலை உருவாகியிருந்தது.
ஐந்து நாட்கள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளைவிட ஒரு நாள் போட்டிகளும், அதற்கான உலகக் கோப்பையும் கிரிக்கெட் உலகத்தில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தன. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவை கோலோச்சிய நிலையில், ஒரு நாள் போட்டிகள் அதிகமானபோது வெஸ்ட் இன்டீஸ் அணி கவனம் பெற்றது. ஆஸ்திரேலிய அணியும் அதற்கேற்ப தன்னை தக்கவைத்துக் கொண்டது. இலங்கை, ஜிம்பாப்வே போன்ற புதிய அணிகள் கிரிக்கெட் உலகத்தில் கவனம் பெற்ற நிலையில், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வடேகர், பட்டோடி, ஃபரூக் இன்ஜினியர் போன்றவர்கள் பெயர் பெற்றிருந்த நிலையில், சுனில் கவாஸ்கரின் வருகையும், அவரது சதங்களும் அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பெற்ற வெற்றியும், அவரைத் தொடர்ந்து கபில்தேவ், வெங்சர்க்கார், விஸ்வநாத், அசாருதீன், டென்டுல்கர், ஷேவாக், டிராவிட், தோனி, கோலி எனப் பல வீரர்கள் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பல சாதனைகள் படைத்ததும் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. கிரிக்கெட் உலகிலும் தனி இடத்தை உருவாக்கியது.
ட்வென்ட்டி 20 எனும் இருபது ஓவர்கள் போட்டி அறிமுகமானபோது கிரிக்கெட்டை ஃபுட்பால், ஹாக்கி போல விறுவிறுபாக்கியது. குறைந்த நேரத்திற்குள் அதிரடி ஆட்டம் ஆடவேண்டிய நிலைக்கு பேட்ஸ்மென்கள் தள்ளப்பட்டனர். எப்படியாவது விக்கெட் எடுத்தாக வேண்டிய நிலைக்கு பவுலர்கள் ஆளாயினர். விறுவிறுப்பான 20 ஓவர் போட்டிகள், வியாபாரத்திற்கு ஏற்றதாக மாறியதால், இந்தியாவுக்குள்ளேயே பல அணிகளை உருவாக்கி ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகளை உருவாக்கின. தேசபக்தி என்பது மாநில பக்தியாக மாறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மஞ்சள் தமிழராகி, தல எனப் பட்டம் பெற்றார். ஐ.பி.எல். அணிகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவதும், சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டதும் கிரிக்கெட் வரலாற்றின் மாபெரும் அவலங்கள்.
முற்றிலும் வியாபாரமாகவும், ஒவ்வொரு செயலும் விளம்பரமாகவும் மாறிவிட்ட கிரிக்கெட்டில் மீண்டும் அந்த ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளின் நேர்த்தியான, முழுத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கொண்ட ஆட்டங்களைக் காண முடியாதா என உண்மையான கிரிக்கெட் ஆர்வலர்களும், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களும் கவலையுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் கவலையை நீக்கி, பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கிடையிலான ஆண்டர்சன்-டென்டுல்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட்டுகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர்.
இந்திய அணியின் சுப்மன்கில் அடித்த சதங்கள், தொடரில் அவர் 700 ரன்களைக் கடந்து, ஏறத்தாழ 50 ஆண்டுகளாக நிலைத்திருந்த கவாஸ்கரின் சாதனையை முறியடித்ததும், ஜெய்ஸ்வால், ராகுல், வாஷிங்டன் ஆகியோரின் சதங்களும், சிராஜ்-பும்ரா-பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் அபாரமான பந்துவீச்சும் பெரும் பாய்ச்சலாக இருந்தன. இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ரூட், ப்ரூக், போப், டங் ஆகியோரின் ஆட்டமும் சிறப்பாக அமைந்தன.
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே உரிய நேர்த்தி, உத்தி, எதிர்பாராத திருப்பம், இரண்டாவது இன்னிங்ஸ் எனும் மறுவாய்ப்பு, அதற்கேற்ற வியூகம் என இந்த டெஸ்ட் தொடர் முழுவதுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கான விருந்து. ஒரு டெஸ்ட் டிரா ஆக, மற்ற 4 ஆட்டங்களில் இந்தியாவும் இங்கிலாந்தும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடர் சமன் ஆனதிலும் இரு அணிகளின் வலிமை வெளிப்பட்டது. கடைசி டெஸ்ட் போட்டியான ஐந்தாவது போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் காட்டிய தீரமும், கடைசி விக்கெட் வரை இங்கிலாந்து ஆடிய விதமும், அதுவரை வீரர்களுக்குள் இருந்த இறுக்கங்கள், கோபங்கள், காரசார வார்த்தைகள் எல்லாவற்றையும் கடந்து கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதை நிலைநிறுத்தி, டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்குப் புத்துயிர் அளித்துள்ளது.