தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான மோதல் எல்லைப் பகுதிகள் மற்றும் பழங்காலக் கோவில்களின் உரிமை தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையாகும்.
மோதலுக்கான முக்கிய காரணங்கள் :
- கோயில் சர்ச்சை: இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக 11-ஆம் மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட தா முயென் தோம் (Ta Muen Thom) மற்றும் பிரீயா விஹார் (Preah Vihear) ஆகிய பழமையான சிவன் கோயில்கள் உள்ளன. இவை யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக சர்ச்சை நிலவி வருகிறது.
- எல்லை வரையறை: பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தின் போது 1907-இல் வரையறுக்கப்பட்ட 800 கி.மீ நீளமுள்ள எல்லைக் கோட்டை இரு நாடுகளும் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்வதால் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது.
- எமரால்டு டிரையாங்கில் (Emerald Triangle): தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் இந்த முக்கோண வடிவப் பகுதியில் உள்ள நிலத்திற்காக இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

2025-ல் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றம் :
- மே – ஜூன் : எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால் பதற்றம் தொடங்கியது. தாய்லாந்து மற்றும் கம்போடிய தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் சர்ச்சைகளால் நிலைமை மோசமானது.
- ஜூலை : ஜூலை மாதம் நிலக்கண்ணி வெடி விபத்து மற்றும் அதைத் தொடர்ந்த துப்பாக்கிச் சூடு காரணமாக இரு நாடுகளும் பீரங்கிகள் மற்றும் போர் விமானங்களைப் (Thai F-16) பயன்படுத்தித் தாக்கிக் கொண்டன. இதில் சுமார் 48 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 லட்சம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
- அக்டோபர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோரின் தலையீட்டால் அக்டோபரில் “கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம்” கையெழுத்தானது.
- டிசம்பர் : இந்த அமைதி ஒப்பந்தம் டிசம்பர் தொடக்கத்தில் முறிந்தது. டிசம்பர் 8 அன்று தாய்லாந்து மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
- எல்லையில் பதற்றம் நிலவுவதால் தாய்லாந்தின் குறிப்பிட்ட 7 மாகாணங்களுக்கு (உபோன் ரட்சதானி, சுரின் போன்றவை) இந்திய சுற்றுலாப் பயணிகள் செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலை :
- தாய்லாந்து (Thailand)- கம்போடியா இடையே நாளுக்குநாள் அதிகரித்து வரும் ராணுவ தாக்குதல்களால், தாய்லாந்தில் 4 லட்சம் பேரும், கம்போடியாவில் 5 லட்சம் பேரும் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- டிசம்பர் 22 அன்று நடந்த ஆசியான் சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதலைத் தீர்க்கும் நோக்கில், டிசம்பர் 24 அன்று இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், மேலும் இது இரு நாடுகளின் பொது எல்லைக் குழுவின் (GBC) கீழ் நடைபெறும் ஒரு அமைதியான பேச்சுவார்த்தையாகும். மலேசியா ஏற்பாடு செய்த இந்த ஆசியான் கூட்டத்தில், போர் நிறுத்தம் மற்றும் மோதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கும், மோதலைத் தணிப்பதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
