
கூட்டணிக்கு பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நேரத்தில் செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துகிறது என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்றார் போல் செங்கோட்டையனும் திடீரென்று கட்சிக்குள் திமிறி எழுந்தார்.
ஆனால், யாரும் எதிர்பார்த்திராத வகையில் பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட பாஜக சீனியர் நிர்வாகிகளை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, தான் மக்கள் பிரச்சனை தொடர்பாகத்தான் அமித்ஷாவை சந்தித்ததாகவும், கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்று தெரிவித்தார். ஆனால் அமித்ஷாவோ, பழனிசாமியில் டீல் பேசிக்கொண்டிருந்த நேரத்திலேயே, தமிழ்நாட்டில் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று போட்ட எக்ஸ்தள பதிவு அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதைச் சொன்னது.
அதே நேரம், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கட்சிக்குள் சேர்க்கச்சொல்லி அமித்ஷா அறிவுறுத்துவதாகவும், முதல்வர் வேட்பாளர் பழனிசாமி இல்லை என்று அமித்ஷா சொன்னதால் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது என்று செய்திகள் பரவின.

அந்த நேரத்தில் செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இதுவும் மக்கள் பிரச்சனைக்காகத்தான் என்று திசை திருப்பப்பட்டது. அடுத்தடுத்து சிவி சண்முகம், தம்பிதுரை என்று அதிமுகவின் சீனியர்கள் டெல்லி பாஜக ரூம்க்கு சென்று வருவதால் பழனிசாமி இல்லாமல் செங்கோட்டையன் தலைமையில் புதிய அணியா? என்ற பேச்சு எழுந்திருக்கிறது.