
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு கர்ச்சீப்பால் முகத்தை மூடியபடி காரில் திரும்பி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அமித்ஷாவை அ.தி.மு.க பிரமுகர்கள் தொடர்ந்து சந்திக்கிறார்கள். முதலில் சந்தித்தவர் டெல்லியில் பல கார்கள் மாறிச் சென்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியேதான். அதன்பிறகு, பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அறிவித்தவர் அமித்ஷா. தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று சொல்லப்பட்டது. எடப்பாடியைக் கேட்டபோது எல்லாவற்றையும் அமித்ஷாவே சொல்லிவிட்டார் என்றார்.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த செங்கோட்டையன், ஹரித்வார் செல்வதாக சொல்லிவிட்டு அமித்ஷாவை சந்தித்துவிட்டுத் திரும்பினார். “நான்தான் ஜெயலலிதா மகள்” என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒருவரும் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்ததாக பேட்டி அளித்தார். இதெல்லாம் என்ன கணக்கு என்று உண்மையான அ.தி.மு.க தொண்டர்களுக்கு எதுவும் புரியவில்லை.
பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி மீண்டும் வெளிப்படையாக அமைந்தபிறகு, எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் என்பதை மறுத்தும் ஆதரித்தும் கூட்டணிக்குள்ளிருந்தே கருத்துகள் வந்தன. தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை மட்டும் பா.ஜ.க தலைமை உறுதி செய்திருக்கிறது. ஒருவேளை, அந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் அ.தி.மு.க தனித்து ஆட்சியமைக்குமா, பா.ஜ.க.வும் இணைந்திருக்கும் கூட்டணி ஆட்சி அமையுமா என்பதை உறுதி செய்வதில் இப்போது வரை அ.தி.மு.க ஒரு கருத்தையும் பா.ஜ.க. ஒரு கருத்தையும் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஆவேச கருத்துகள் பலவும் அ.தி.மு.க தலைமைக்கு எதிராகவே இருந்தன. தமிழ்நாடு பா.ஜ.க.வின் இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் என்பதால் அவர் ஓரளவு கூட்டணியைப் பக்குவத்துடன் கையாளும் மனநிலையுடன் செயல்படுகிறார்.
இப்படிப்பட்ட சூழலில்தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமிக்கு சீனியரும் கோபி தொகுதியில் தொடர்ந்து பல முறை வெற்றி பெற்று வருபவருமான செங்கோட்டையன் தன் ஆதரவாளர்களைத் திரட்டி செய்தியாளர்களை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது குற்றம்சாட்டி, அ.தி.மு.க.வின் அனைத்து தரப்பினரையும் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பதற்கு செப்டம்பர் 15 வரை கெடு விதித்தார். அவர் சொல்கின்ற அ.தி.மு.க.வின் அனைத்துத் தரப்பு என்பது ஓ.பி.எஸ்.ஸின் அ.தி.மு.க மீட்பு இயக்கம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., சசிகலா, கே.சி.பழனிசாமி உள்ளிட்ட எல்லாரையும் உள்ளடக்கியதா அல்லது தனக்கான கூடுதல் அதிகாரம் குறித்ததா என்பதை விளக்கவில்லை.
செங்கோட்டையன் கொடி உயர்த்தியதும், ஒன்றுபட்ட அ.தி.மு.க.வாக களம் கண்டால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் உடனே குரல் கொடுத்தனர். செங்கோட்டையன் விதித்த செப்டம்பர் 15 கெடு தேதி வந்ததும், எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் என்ற தகவல் வந்தது.
செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க ஆட்சி நீடித்ததற்கு காரணம் பா.ஜ.க.தான். அதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். அதாவது, ஜெயலலிதா மரணப்படுக்கையில் கிடந்தபோது, தமிழ்நாட்டு அரசியலில் ஊடுருவிய பா.ஜ.க., மெஜாரிட்டி பலத்துடன் இருந்த அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக காய் நகர்த்தி, அதில் பல பிளவுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ், அதன்பிறகு இ.பி.எஸ் என்று மாறி மாறி தனக்கான பொம்மைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, சசிகலா, தினகரன் போன்றவர்களை ஜெயிலுக்கு அனுப்பி, அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் ரெய்டு நடத்தியதையெல்லாம் சேர்த்துதான் அ.தி.மு.க ஆட்சியை பா.ஜ.க.காப்பாற்றியது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கூவத்தூரில் நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் கூத்துகள் உலகப் புகழ் பெற்றவை. அப்போது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித்தீர்ப்பை உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகாரம் சிறைக்குச் செல்ல, முதலமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை சசிகலா ஆதரவாளர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இதைத்தான் டி.டி.வி. தினகரன் இப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகிறார்.
அ.தி.மு.க என்பது டெல்லியின் தயவில் உருவான கட்சி. அதன் நிறுவனரான எம்.ஜி.ஆர் டெல்லியில் யார் பிரதமராக இருந்தாலும் அவர்களுடன் இணக்கமானப் போக்குடன் நடந்து கொள்வதை கட்சியின் கொள்கை முடிவாகவே வைத்திருந்தார். அதன்பின் தலைமையேற்ற ஜெயலலிதா, தனக்குத் தேவையான வகையில் டெல்லியுடன் தொடர்புகளை வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் மீதே டெல்லியிடம் புகார் தெரிவித்தவர் ஜெயலலிதா. இப்போதும் அ.தி.மு.க தலைமை தனது சொந்தக் கட்சிப் பிரச்சினைகளுக்கு டெல்லியிடமே தீர்வை எதிர்பார்க்கிறது அ.தி.மு.க.