ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி என்று அதிமுக 4 அணிகளாக பிரிந்து இருந்தாலும் பொதுவான பார்வையில் இவர்கள் அனைவருமே அதிமுகவினர்தான். அந்த வகையில் இந்த 4 அணிகளில் இருந்தும் திமுகவுக்கு படையெடுத்து வருகின்றனர். தேர்தல் நெருக்கத்தில் அதிமுக கூடாரம் முழுவதுமாக காலியாகும் சூழல் உள்ளது.
தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ் பக்கம் நின்றவர்களில் கே.பி.முனுசாமி, மாபா பாண்டியராஜன் உள்பட 80 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் போய்விட்டனர். மிச்சமிருந்த 20 சதவிகிதம் பேரில் 5 சதவிகிதம் பேர் திமுகவில் இணைந்து விட்டனர். மீதமிருக்கும் 15 சதவிகிதம் பேரும் திமுகவு பக்கம் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

தொடங்கிய தர்மயுத்தத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்துகொண்டதால் ஓபிஎஸ் மீது அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை இழந்தனர். இதனால் அப்போதே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றனர்.
அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து அதிமுகவை கைப்பற்றாமல் பாஜகவை மட்டுமே நம்பி காலம் கடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி பிரயோசனம் இல்லை என்று கே.சி.பழனிசாமி, ஜேசிடி பிரபாகர், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினர்.

நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த ஓபிஎஸ் ஆதரவாளரும் தனது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓபிஎஸ் அணிக்குச்சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி பிரயோசனம் இல்லை என்று அவரும் திமுக பக்கம் வந்து சேர்ந்தார். இந்நிலையில் இன்று ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு சென்றுவிட்டார்.
இதன் பின்னர் ஓபிஎஸ் கூடாரத்தில் இருக்கும் முக்கிய தளபதி வைத்திலிங்கம்தான். அவரும் திமுகவில் இணைய உள்ளதாக தஞ்சை அதிமுக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

ஓபிஎஸ் கூடாரம் காலியாவது ஒரு பக்கம் இருக்க, எடப்பாடி பழனிசாமியின் கூடாரமும் காலியாகிக் கொண்டிருக்கிறது. இபிஎஸ் அணி – ஓபிஎஸ் அணி என்ற நிலை வந்தபோது இபிஎஸ் அணியில் இருந்த அன்வர் ராஜாவும் திமுகவில் இணைந்துவிட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், ’’அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர்தான் எடப்பாடி பழனிசாமி’’ என்று சொல்லி, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமைக்குரல் எழுப்பி இருக்கிறார். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்த செங்கோட்டையன் தேர்தல் நெருக்கத்தில் திமுக பக்கம் செல்லவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறது கோபி செட்டிப்பாளையம் வட்டாரத்தகவல்.

இவரைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குச் சென்று அவரிடம் ஒருங்கிணைப்பை வலியுறுத்திய 6 பேரில் மூன்று பேர், எடப்பாடி பழனிசாமியின் அழிச்சாட்டியத்தை கண்டு கொதித்தெழுந்து திமுகவுக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்கள் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரத் தகவல்.

தவிர, தென் மாவட்டத்தில் உள்ள சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும், தமிழக தலைநகரத்தில் இருந்து 1 அதிமுக முக்கியப்பிரமுகரும், தமிழகத்தின் இதயப்பகுதியில் இருந்து ஒரு அதிமுக பிரமுகரும் அண்ணா அறிவாலயம் செல்ல விருப்பதாகச் சொல்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரத் தகவல்.
