கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியதன் பெயரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைச்செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மூவரிடமும் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். முதல் விசாரணை 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த விசாரணை இன்றுடன் நிறைவடைந்திருக்கிறது. மூன்று நாள் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிபிஐ காட்டிய ஆடியோ ஆதாரத்தால் திக்கித் திணறியிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா.
என்ன நடந்தது? சிக்கிய ஆதாரம் என்ன?
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பாக தவெகவின் செல்வாக்கை அறிந்து கொள்ள நினைத்து பிரச்சார சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தோறும் மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய்.
‘’வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நா வரேன்’’ என்று தனது பிரச்சார பயணத்தை 13.09.2025ல் திருச்சியில் தொடங்கினார். அன்றைய தினம் அரியலூர் மற்றும் பெரம்பலூரிலும் அரியலூரிலும் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், திருச்சியில் கூட்டத்தை சமாளித்து செல்ல அதிக நேரம் ஆனதால் பெரம்பலூரில் பிரச்சாரம் செய்யாமல் சென்னை திரும்பிவிட்டார் விஜய்.

இதையடுத்து 20.09.2025ல் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் விஜய். இதில், நாகப்பட்டினத்தில் தவெகவினர் எதிர்பார்த்த அளவில் கூட்டம் கூடவில்லை. இதன் பின்னர் திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தா விஜய். ஆனால் திடீரென்று கரூர், நாமக்கல்லுக்கு பிரச்சாரப் பயணத்தை மாற்றினார். டிசம்பர் மாதத்தில் கரூரில் பிரச்சாரம் என்று திட்டமிட்டிருந்ததை மாற்றி கடந்த 26.09.2025ல் தவெகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், 27.09.2025 அன்று நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நண்பகல் 12.00 மணிக்கும் விஜய் பிரச்சாரம் செய்கிறார் என்று அறிவிப்பு வீடியோ பதிவிடப்பட்டது. இதைப்பார்த்துவிட்ட விஜய் ரசிகர்கள் சிலர் , காலை 8.45மணிக்கு விஜய் வருவதாகச் சொல்லிவிட்டதால் முதல் நாள் இரவிலேயே கே.எஸ்.திரையரங்கம் அருகில் குவியத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், 27.09.2025 அன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் மக்களை சந்திப்பதாக சொன்ன விஜய், காலை 8.45 மணிக்குத்தான் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்றார் விஜய். தனி விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து முசிறி, தொட்டியம் வழியாக சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார் விஜய். இவ்வளவு தாமதமாகச் சென்றும் தனது செல்வாக்கை காட்ட வேண்டும் என்பதற்காக ரோடு ஷோ நடத்தினார் விஜய். இதனால் காலையில் 8.45 மணிக்கு வருவதாக அறிவித்திருந்த நிலையில் நண் பகல் 12 மணிக்குத்தான் நாமக்கல் சென்றார்.

திருச்சியில் நடந்த பிரச்சாரத்தின் போது தவெகவினர் செய்த அடாவடித்தனங்களால் காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதை நாகப்பட்டினம் பிரச்சாரத்தின் போது விமர்சித்தார் விஜய். நாகப்பட்டினம், திருவாரூர் பிரச்சாரங்களின் போது மரங்களிலும், மின் கம்பங்களிலும் ஏறியதாலும், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாலும் விஜயின் பிரச்சார வாகனத்தை ரசிகர்கள் பின் தொடரக்கூடாது. பிரச்சார வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். ரசிகர்களும், தொண்டர்களும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினால் அவற்றிற்கு தமிழக வெற்றிக்கழகமே பொறுப்பேற்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டும் இதில் எந்த நிபந்தனையினையும் பின்பற்றவில்லை தவெக.

விஜயின் பிரச்சார வாகனத்தை தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அதில் இருவர் இரு சக்கர வாகனத்துடன் பிரச்சார வேனில் முன் சக்கரத்தில் சிக்கினர்.
நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவதாகச் சொல்லி டெம்போ, வேன்கள் மூலம் காலை 10 மணியில் இருந்தே மக்களை அழைத்து வந்து அமரவைத்து விட்டனர் தவெகவினர். நாமக்கல்லிலேயே 12 மணிக்குத்தான் பிரச்சாரம் மேற்கொண்டதால் அங்கிருந்து புறப்பட்டு கரூர் வேலுச்சாமிபுரம் செல்ல இரவு 7 மணியாகிவிட்டது.
அதுவரையிலும் 7 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர், உணவு இன்றி வெயிலில் காத்திருந்து மக்கள் வாடினர். இரவு 7 மணிக்கு மேல் நடந்த விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் அந்த பெருந்துயரம் நிகழ்ந்தது. 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 146 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து காவல்துறையின் எப்.ஐ.ஆரில், ”மாலை 4 45 மணிக்கு விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம் தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்தார். அனுமதி இல்லாமல் ரோட் ஷோ பல்வேறு இடங்களில் நடத்தி பொது மக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தி அதிக இடங்களில் நிபந்தனைகளை மீறினார்
காலதாமதம் செய்து மாலை 6:00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்ஷன் ராங் ரோட்டில் விஜய் வாகனங்களை அழைத்துச் சென்று மாலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்ஷனில் தொண்டர்கள் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தினார், அங்கே வாகனத்தை சிறிது நேரம் நிறுத்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடினர். அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோத செய்து மக்களிடையே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சுத் திணறல் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனிடமும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் மற்றும் இணைச்செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமாரிடம், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் காவல்துறை கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினார்.

நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பு போலீசார் வழங்கியபோதும் தவெகவினர் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்கு படுத்தாமல் ரோட்டில் அருகில் உள்ள கடைகளுக்கு நிழல் தர வேண்டி அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகைகளிலும் மரங்களிலும் கட்சித் தொண்டர்கள் ஏறினர். தகரக் கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்து இருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால் பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது
மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை தாமதப்படுத்தினர். பல மணி நேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்தனர். இதன் விளைவாக மேற்படி சம்பவத்தில் அதிக அளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலருக்கு காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்’’ என்று கூறப்பட்டிருந்தது.

டெல்லியில் நடந்த சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணயில் இது குறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்கப்படடிருக்கிறது. இதை அவர் மறுத்திருக்கிறார். ஆனால் கரூர் எஸ்பி மற்றும் டிஎஸ்பி, ஆதவ் அர்ஜூனாவிடம் 20 முறை தொலைபேசியில் அழைத்து, கூட்டத்தை நிறுத்துமாறு கெஞ்சியதற்கான ஆடியோ ஆதாரங்கள் சிபிஐ வசம் உள்ளதாகத் தெரிகிறது. ஆதவ் அர்ஜுனா இரண்டு முறை அழைப்புகளை ஏற்றுப் பேசியதாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் காவல்துறை அதிகாரிகளின் அழைப்புகளைத் தவிர்த்துவிட்டதற்காகன ஆதாரமும் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கி இருக்கிறது.
இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆதவ் அர்ஜூனா விசாரணையில் திக்கித் திணறியிருக்கிறார்.
