பொதுக்கூட்டம், மாநாடு, ஆர்ப்பாட்டம் என எங்கெங்கிலும் அராஜக போக்கினையும் அநாகரிக போக்கினையும் கடைப்பிடித்து வருகின்றனர் தவெகவினரும் பாஜகவினரும். அரசியலில் முதிர்ச்சியின்மை காரணமாகத்தான் அவர்கள் இவ்வாறு செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போதைய இரு நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்துகின்றன.
நியூஸ்-18 சேனலின் ‘மக்கள் பதிவு’ நிகழ்ச்சி சென்னையில் நிகழ்ந்தது. இதில் நாஞ்சில் சம்பத், தங்க தமிழ்ச்செல்வன், இடும்பாவனம் கார்த்திக், எஸ்.ஜி.சூர்யா, செந்தில்வேலன் பங்கேற்றிருந்தனர்.

ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் அந்தந்த கட்சியினர் அரங்கத்தில் இருந்தனர். திமுகவினர் வருவதற்குள் அரங்கு நிறைந்துவிட்டது. அதனால் அவர்கள் வெளியே அமர்ந்தபடியே நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.
நிகழ்ச்சியில் செந்தில்வேல் பேச முற்பட்டபோது அவரை பேசவிடாமல் ஒருமையில் பேசி கூட்டலிட்டனர் பாஜகவினர். இதில் ஆத்திரமடைந்தார் செந்தில்வேல். பலமுறை நிகழ்ச்சி எற்பாட்டாளர்கள் சமாதானப்படுத்தியும் கேட்காமல் கூச்சலிட்டதால் செந்தில்வேல் அரங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இது குறித்து அவர், ‘’பாஜகவும், பாஜகவின் மறு உருவமாக ’மரு’ வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் வரும் தவெகவும் சமீபகாலமாக இது போன்ற நிகழ்வுகளில் திமுகவின் பேச்சுக்கு கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாமல் கூச்சல் எழுப்பி, அராஜகமான செயலில் ஈடுபட்டு, திமுகவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போக விடாமல் செய்வதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். இதில் திமுக தோழர்கள் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் வெளியே நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால் வெளியே நாற்காலி போட்டு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளே திராவிட இயக்க தோழர்கள் இல்லாத நிலை ஏற்பட்டபோது, வணக்கம் என்று சொல்லி நான் கருத்துக்களை முன்வைக்க தொடங்கியதுமே பாஜக தற்குறி கூட்டம் மிக அநாகரீகமாக நடந்துகொண்டார்கள். ஒருமையில் என்னை வசைபாட தொடங்கினார்கள். ஆனாலும் மிகுந்த பொறுமையோட நான் மீண்டும் மீண்டும் பேச தொடங்கியபோதும் பாஜக குண்டர்கள் தகாத வார்த்தைகளால் பேசத் தொடங்கினார்கள். அதனால் கன்னியக்குறைவான இந்த அவையில் இருக்க விரும்பவில்லை என்று மனவேதனையுடன் வெளியேறினேன்’’என்கிறார்.

சென்னையில் பாஜக இப்படி என்றால் புதுச்சேரியில் தவெக இந்த அராஜகத்தை அரங்கேற்றி இருக்கிறது. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் யூடியூப் சேனல் ஒன்று நடத்திய அரசியல் விவாத மேடையில் திமுக நிர்வாகி காயத்ரி ஸ்ரீகாந்த் பேச தொடங்கிய போது, அவரை பேச விடாது கூச்சலிட்டனர். கரூர் சம்பவம் குறித்து பேசியபோது, தவெகவினர் மேடையிலேயே ஏறி கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் காயத்ரி ஸ்ரீகாந்த் பேச முடியாமல் போனது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமாதனப்படுத்த முயன்றபோதும் தவெகவினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.

பாஜக, தவெகவின் இந்த அராஜக சம்பவங்களால் சூடாகிக் கிடக்கிறது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியல் களம்.
