கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவிடம் 2ஆவதுநாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்தில் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்று இரவு நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்தது. வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சிறப்பு விசாரணைக்குழுவுக்கு எதிராக தவெக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த சிறப்பு குழுவின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சிபிஐ இந்த சம்பவத்தை விசாரிக்க உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி எஸ்.ஐ.டி குழுவின் விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. 1316 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கைகள் மற்றும் வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தனர். இதன்பின்னர் சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ. அடுத்த கட்டமாக பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், பிரச்சார பேருந்தில் இருந்த சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகவும், அவற்றை இரு தினங்களில் நேரில் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் தவெக இணைச்செயலாளர் நிர்மல்குமார்.

இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைச்செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி இவர்கள் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது. இன்றும் இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதையடுத்து வரும் ஜனவரி மாதம் தவெக விஜய்க்கும் சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளது என்கிறது டெல்லி சிபிஐ வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
