எடப்பாடி பழனிச்சாமிக்கும் சீனியர்களுக்கும் இடையே நடந்து வரும் பல்வேறு மோதல்களினால் அதிமுகவில் இன்னொரு கீறல் விழந்து 5ஆவது உருவாகப்போகுதா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் என்று இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அடையாளம் காணப்படுகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமே எஸ்.பி.வேலுமணிதான் என்கிறது அதிமுக வட்டாரம். அப்படிப்பட்ட வேலுமணியே இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நிற்கும் நிலை வந்திருக்கிறது. அவருக்கு ஆதரவாக பல சீனியர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இதனால் அதிமுகவில் 4ஆவது அணி உருவாகும் என்ற நிலை வந்திருக்கிறது.
’பத்து தோல்வி எடப்பாடி பழனிச்சாமி’ என்று ஓ.பன்னீர்செல்வம் உள்பட எதிர்தரப்பினர் விமர்சிக்கும் அளவிற்கு சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருவதால், சசிகலா அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று அதிமுக 4ஆக பிரிந்து நிற்பதுதான் தொடர் தோல்விக்கு காரணம். எல்லோரும் கூடி நின்றால் வாக்குகள் சிதறாமல் இருக்கும். வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அனைவரும் இணைந்து விட வேண்டும். எல்லோரும் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்.
இது நடந்தால்தான் அதிமுக வெல்லும். அப்படி 2026 தேர்தலில் அதிமுக வெல்ல முடியாவிட்டால் கட்சியே காணாமல் போய்விடும் என்று நினைக்கின்றனர் அதிமுக சீனியர்கள். கடந்த ஜூலை மாதத்தில் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்ற எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் இந்த கருத்தை வலியுறுத்த, ஒரு சதவிகிதம் கூட அதற்கு வாய்ப்பு இல்லை என்று கறாராகச் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
பொ.செ. சொல்லிவிட்டார் என்பதற்காக சீனியர்கள் இந்த விவகாரத்தை அத்தோடு விடவில்லை. எடப்பாடியை பழனிச்சாமியை அவரது சென்னை இல்லத்திலும் சந்தித்து வலியுத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மாளிகையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அந்த 6 சீனியர்களோடு சேர்ந்து மேலும் பல சீனியர்களும் வலியுறுத்த, வெளியே இருப்பவர்கள் உள்ளே வந்தால் தன் நாற்காலிக்கு ஆபத்து என்பதை வெளிப்படையாக சொல்லாமல் வேறு விதத்தில் அதை புரியவைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
எந்த பஞ்சாயத்தாக இருந்தாலும் நமக்குள் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு வெற்றிதான் முக்கியம் என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதாமாக இருப்பதால், அடுத்து என்ன செய்யலாம்? என்று சிவி சண்முகத்தில் பங்களாவில் சீனியர்கள் ரகசிய ஆலோசனைக்கூட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
அதிமுகவில் இணைப்பு விவகாரத்தில் வேலுமணிக்கு ஆதரவாக செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், கேபி அன்பழகன், தங்கமணியுடன் ஆர்.காமராஜ், பொள்ளாட்சி ஜெயராமன், செல்லூர்ராஜூ, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் ஆதரவாக நிற்கின்றனர்.
கடைசிவரை எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக இருந்தால் அதிமுகவில் இன்னொரு கீறல் விழும் நிலை இருக்கிறது. வேலுமணி தலைமையில் ஒரு அணி உருவாக வாய்ப்பிருக்கிறது என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டராம்.