எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, கடந்த இரண்டு நாட்களாக வள்ளலாரின் பிறந்த தினத்தில் சிம்பு ரசிகர்கள் அன்னதானம் செய்யும் வீடியோக்கள் வலைத்தளங்களில் பரவி வருவது. இன்றைக்கு சிம்பு நாய்க்குட்டிக்கு உணவிடும் வீடியோவும் வைரலாகி வருகிறது. ஜீவகாருண்யத்திற்கு மாறினார் சிம்பு என்பதையே இவை உணர்த்துகின்றன என்று பார்த்தால், அதுவே உண்மை என்று சொல்லி வடலூர் வள்ளலார் தருமசாலைக்கே சென்று அணையா அடுப்பிலும் தீ மூட்டிவிட்டு வந்திருக்கிறார் சிம்பு.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று ஜீவகாருண்யம் பாடியவர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.
எவரும் பசித்திருக்கக் கூடாது என்று வடலூரில் இவர் ஏற்றி வைத்து அடுப்பின் தீ 158 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அந்த அணையா அடுப்பு அனுதினமும் பலரின் பசியை போக்கி வருகிறது.

ஜீவகாருண்யத்தை போதித்தவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு, தயவு, இரக்கம் காட்டுவது ஜீவகாருண்யம் என்றாலும், ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து அவர்களின் பசியை போக்குவதையே ஜீவகாருண்யத்தின் முக்கிய லட்சியம் என்று வரையறுத்துள்ளார் வள்ளலார்.
அதனால்தான், ‘’பசி என்ற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்றபோது ஆகாரத்தால் அதை அணைப்பது தான் ஜீவகாருண்யம். பசி என்ற விஷக் காற்று, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்கின்ற தருணத்தில், ஆகாரம் கொடுத்து அணையாமல் ஏற்றுவதே ஜீவகாருண்யம். பசி என்ற புலியானது ஏழைகளின் உயிர் மீது பாய்ந்து கொல்லத் தொடங்கும் தருணத்தில், அப்புலியைக் கொன்று அவ்வுயிரை ரட்சிப்பதே ஜீவகாருண்யம்’’என்று பாடியவர் வள்ளலார்.

இதற்காகத்தான் வடலூரில் அணையா அடுப்பை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடெங்கிலும் இன்றைக்கு பல்வேறு இடங்களில் வள்ளலார் இராமலிங்க அடிகளார் மடங்களில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு, இரக்கம் காட்டுவது, உணவளிப்பது வேண்டும் என்று நினைத்திருக்கிறார் சிம்பு. ஆனால், 200 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு கொள்கையுடன் ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிந்ததும் வடலூர் சென்று அந்த அணையா அடுப்பில் விறகு வைத்து தீ மூட்டினார் சிம்பு. அங்கிருந்தவர்களுக்கு உணவு பரிமாறிய பின்னர் வள்ளலார் சத்திய ஞான சபையில் அமர்ந்து தியானம் செய்தார்.

’’சைவம் என்பதால்தான் இங்கே வந்தேன். நாம நினைப்பது மாதிரியே 200 வருசத்துக்கு முன்னாடியே ஒருத்தா இருந்திருக்கிறார்னு நினைச்சு இங்கே வந்தேன்’’ என்று வடலூர் விசிட் குறித்து தெரிவித்திருக்கிறார் சிம்பு.

தன் ரசிகர்களுக்கும் வள்ளலாரின் ஜீவகாருண்யத்தை அறிவுறுத்தி உள்ளார் சிம்பு. அதனால்தான், கடந்த 5ம் தேதி அன்று வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடெங்கிலும் பல்வேறு மாவட்டங்களில் சிம்புவின் ரசிகர் மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கி உள்ளனர்.
