
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிப் பாடத்திட்டம் எனும் மத்திய அரசின் செயல்பாட்டைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாதது அரசியல் சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் அதனால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கான நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஆண்டுத் தொகையான 2,152 கோடி ரூபாயை வழங்கமுடியாது என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் யாதவ் தெரிவித்திருக்கிறார். இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நிலைப்பாடு என்பதுடன், மத்திய அரசின் அப்பட்டமான அயோக்கியத்தனத்தையும் காட்டுகிறது.
மத்திய கல்வி அமைச்சருக்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர், இந்திய அரசியல் சட்டத்தில் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது எனக் கேட்டிருக்கிறார். சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். முதலமைச்சர் கேட்டிருப்பதில் நியாயம் உள்ளது. கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து எமர்ஜென்சி காலத்தில் பொதுப்பட்டியல் எனும் ஒத்திசைவுப் பட்டியலுக்கு சென்றது. அதாவது, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்த பட்டியலில் கல்வி உள்ளது. எனவே, மாநில அரசின் கருத்துகள்-மாநில அரசுக்கான உரிமைகள் கல்வித் துறை சார்ந்த திட்டங்களில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கை எனும் தாய்மொழி+இணைப்பு மொழி ஆங்கிலப் பாடத்திட்டம் மாணவர்களின் கல்விக்குப் பெருந்துணையாக இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே விரிவாக எடுத்துக் கூறியுள்ளன. அண்மையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு முன் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், கொரோனா காலத்திற்குப் பிறகு பள்ளிக்கல்வியில் மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்த்ததில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் பெரும் பயனளித்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களின் விகிதாச்சாரத்திலும் தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகின்ற சராசரியைவிட தமிழ்நாடு அதிகளவில் உள்ளது. முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பு முடித்த பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவில் அதிகமாக உள்ளது. படித்த பெண்கள் நிறைந்த மாநிலம் என்பதால் தொழில்துறை சார்ந்த பணியாளர்களில் இந்தியாவின் மொத்த பெண் பணியாளர்களில் தமிழ்நாட்டின் அளவு 43%ஆக உள்ளது. மத்திய அரசு தனது பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்குகின்ற நிதியின் விகிதத்தைவிட, மாநில அரசு கல்விக்கு ஒதுக்குகின்ற நிதியின் விதிகம் கூடுதலாகும்.
இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்று புரியாமலும், தனது அரசின் புள்ளிவிவரங்களைக் கூட அறியாமலும், மாநில உரிமை மீது மத்திய அரசின் மொழித் திணிப்பு எனும் கொடூர ஆயுதத்தைக் கொண்டு தாக்கியிருக்கிறார் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ள கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஆண்டுக்கு 2152 கோடி ரூபாய் நிதியைப் பெற வேண்டிய தமிழ்நாடு அரசின் கல்வித்துறையை திட்டமிட்டு வஞ்சிக்கிறது மத்திய அரசு. இதனை பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்குமான அரசியல் பகை என்று தமிழ்நாடு கருதிவிடக்கூடாது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசினால் ஆண்டுதோறும் 40 லட்சம் மாணவமணிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். 32ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியம் பாதிக்கப்படும். அவர்களின் குடும்பம் பரிதவிக்கும். நிரந்தரப் பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமின்றி, பகுதி நேர ஆசிரியர்கள் 12ஆயிரம் பேர், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கானக் கல்வியை வழங்கக்கூடிய கல்வியாளர்கள், தகவல் உள்ளிடுபவர்கள் உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறை சார்ந்த மற்ற பணியாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவில் அனைவருக்கும் கல்வி உரிமை என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி, 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பொருளாதார சூழலைக் கடந்து கட்டாயமாகக் கல்வியைத் தந்தாக வேண்டும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டு, அந்தப் பள்ளிக்கானக் கட்டணத்தை அரசாங்கம் வழங்கும். மத்திய அரசின் வஞ்சகத்தால், நிதி கிடைக்காத நிலையில், அடிப்படைக் கட்டாயக் கல்வியும் கிடைக்காமல் போகும் சூழ்நிலை உள்ளது. ரெசிடென்ஷியல் ஸ்கூல் எனப்படும் உண்டு-உறைவிடப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களும பாதிக்கப்படுவார்கள்.
இந்தி வெறி எனும் கொடூர ஆயுதத்தால் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைத் துண்டாக்கும் வேலையைச் செய்கிறது மத்திய அரசு.