பிரிட்டிஷ் ஆட்சியில் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வின் அடிப்படையில் ஹரப்பா பகுதியில் கிடைத்த தடயங்களை ஆராய்ச்சி செய்த சர் ஜார் மார்ஷல், சிந்து ஆற்றங்கரையில் இருந்த நாகரிகம் வேதகால நாகரிகத்திற்கு முற்பட்ட நாகரிகமாக இருந்திருக்கிறது. இது ஒரு மாறுபட்ட நாகரிகம் என்ற தனது முடிவினை வெளியிட்டார். 1925ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட அந்த முடிவுகளுக்கு இது நூற்றாண்டு. இந்த நூறு ஆண்டுகாலத்தில் சிந்துவெளி நாகரிகம் குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேதகாலம் எனப்படுவது ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகு அமைந்த காலம். வேதகாலத்திற்கு முற்பட்டதென்றால் ஆரியத்திற்கு முற்பட்ட காலம், அதுவே திராவிடர்களின் காலம், சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என இந்திய-ஐரோப்பிய தொல்லியல் ஆய்வாளர்கள் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி என்பது தமிழ். அதன் கிளைகளாகப் பல மொழிகள் உள்ளன. அதில் பிராகுயி மொழி பலுசிஸ்தானில் பேசப்படுகிறது. ஹரப்பா, மொகஞ்சாதாரோ அகழாய்வுகள் நடைபெற்ற இடங்களுக்கு அருகில் திராவிட மொழிக்குடும்ப அடையாளங்களை ஊர்ப் பெயர்களிலும் காண முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதும் அதன் நீட்சியை சிந்து வெளி ஆய்வுகள் முதல் கீழடி ஆய்வுகள் வரை காண முடிகிறது என்பதும் இந்த ஆய்வுகள் குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக உள்ளன. குறிப்பாக, சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்தியாவில் குதிரை கிடையாது. காளைகள்தான் இருந்தன. சிந்துவெளி முத்திரைகளில் உள்ள திமில் உள்ள காளை உருவத்தையும், கீழடி ஆய்வுகளில் கிடைக்கக்கூடிய திமில் உள்ள காளை வடிவத்தையும் ஒப்பிட்டு, தமிழர்களின் நாகரிகத்தின் நீட்சி குறித்த புதிய பார்வைகளும், காலத்தை நிர்ணயிக்கின்ற கணக்கும் மேற்கொள்ளப்படுகின்றன.
சிந்துவெளி நூற்றாண்டை தமிழ்நாடு அரசின் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்திக் கொண்டாடியிருக்கிறார்கள். இந்தக் கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய முதலமைச்சர் தன்னுடைய பேச்சில், “சிந்துவெளி எழுத்து முறையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் வழிவகையினைத் தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்பிற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இந்த மிகப் பெரிய தொகை என்பது, இந்தத் துறையில் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவோருக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும், உண்மையைக் கொண்டு வரும் உத்வேகத்தையும் வழங்கும்.
வேதகாலத்திற்கு முற்பட்டது சிந்துவெளி நாகரிகம் எனச் சொல்லப்படுவதையும், அது திராவிட நாகரிகம் என்பதால் தமிழர்களோடு தொடர்புடையது என்பதையும் ஏற்க முடியாத சிலர், இதனை சிந்து-சரஸ்வதி நாகரிகம் என மாற்றுவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். சரஸ்வதி நதி தரைக்கடியில் மறைந்திருப்பதாகவும், செயற்கைக்கோள் ஆய்வுகள் மூலம் அதன் ஓடுபாதை கண்டறியப்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாவதும், சிந்துவெளி அடையாளமான காளையை குதிரையாகக் காட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் நேரடி-மறைமுக ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.
வரலாறு சார்ந்த ஆய்வுகளில் உடனடியாக ஒரு முடிவுக்கு வருவது அறிவியல் பூர்வமாகாது. சரியான தரவுகளுடனும், காலநிர்ணயத்தை நவீனத் தொழில்நுட்பத்துடனும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக, மதம் சார்ந்த கண்ணோட்டத்தில் வேத நாகரிகம் என மாற்றுவதற்கு நடைபெறும் முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, எல்லையில் உள்ள இந்தியப் பகுதிகளை சீனா தன்னுடைய பகுதியாக மாற்றம் செய்து கொண்டிருக்கும் அதிர்ச்சித் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அருணாசல பிரதேசம் பகுதியை அடிக்கடி தன்னுடைய நாட்டு வரைபடத்தில் இணைத்து சர்ச்சையைக் கிளப்பும் சீனா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்திய எல்லையில் முகாம்களை அமைத்ததால் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளும் தத்தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, அதனை செயல்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், லடாக் பகுதியில் இரண்டு புதிய மாவட்டங்களை சீனா உருவாக்கி அதனை தன்னுடைய சிஞ்சியாங் மாகாணத்துடன் இணைத்திருக்கும் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பிற்கு இந்தியத் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றை மாற்றும் கவனத்தில், எல்லையை இழந்து கொண்டிருக்கிறோமோ!