பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் கீழ் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டு வருவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இதழான The Lancet புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.2% என்ற அளவில் மட்டுமே சுகாதாரப் பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்படுவதாகவும், இந்தியாவின் சுகாதாரத் திட்டங்கள் இதுவரை தேவைப்படும் மக்களுக்கு முறையாக சென்றடைவதில் இருந்து தோல்வியடைந்து உள்ளதாகவும், The Lancet கூறியுள்ளது.
G20 கூட்டமைப்பு நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவின் சுகாதாரச் செலவு மிகக் குறைவாக உள்ளது. மேலும், G20 நாடுகளில் இந்தியா 4-வது பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், தனிநபர் வருமானமும்(Per-capita income) மிகக் குறைவாக உள்ளது.
‘இந்தியாவின் தேர்தல்கள்: ஏன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையும் முக்கியம்’ என்ற தலைப்பில், The Lancet ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசு நாட்டின் சுகாதாரத் துறைக்காக செலவிடும் தொகையை விட இந்திய குடும்பங்களின் சுகாதாரத் தேவைகளுக்கான செலவினங்கள்(Out of Pocket Expenses) பன்மடங்கு அதிகமாக இருப்பதாக The Lancet கூறியுள்ளது.
சுகாதார பாதுகாப்புக்கான அணுகல் மற்றும் தரம் ஆகிய இரண்டிலும் இந்தியாவில் நிலையான சமத்துவமின்மை நிலவுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பல இந்தியர்களுக்கு இது தெரியாமல் இருப்பதாகவும், இது சுகாதாரத் துறையின் தரவுகளின் வெளிப்படைத்தன்மை இல்லாததை எடுத்துக்காட்டுவதாக The Lancet கூறியுள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக இலக்கு நிர்ணயம் செய்துள்ள இந்தியாவுக்கு, நம்பகத்தன்மையான அரசு தரவுகளும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இருப்பது வளர்ச்சியை பாதிப்படையச் செய்யும் என The Lancet விமர்சனம் செய்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக 2021-ல் நடக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமானது, கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக, இந்தியா குறித்தும் அதன் மக்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விரிவான தரவுகள் எதுவும் இல்லாமல் ஒரு தசாப்தமே கடந்துள்ளதாக The Lancet கூறியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு (2024) மின்னணு முறையில் நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான சுகாதார ஆய்வுகளுக்கும் அடிப்படையாகும்.
உதாரணமாக, நேஷனல் சாம்பிள் சர்வே அமைப்பு மூலம் மக்களின் நோயுறும் தன்மை மற்றும் அவுட்-ஆஃப்-பாக்கெட் செலவினங்களை அளவிடும் முயற்சிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லாததால் பாதிக்கப்படுகிறது.
பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய இந்தியாவின் நம்பகமான ஆதாரமாக ‘மாதிரி பதிவு அமைப்பு கணக்கெடுப்பு அறிக்கை’ (Sample Registration System survey report) இருந்து வந்துள்ளது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கான அறிக்கை ஏன் இதுவரை வெளியிடப்படவில்லை என The Lancet கேள்வி எழுப்புகிறது.
மேலும், இந்தியாவின் ‘வறுமை’ கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஏன் பொது தளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதற்கான காரணங்களும் புரியவில்லை என The Lancet கூறியுள்ளது.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வுக்கு தலைமை தாங்கிய K.S.ஜேம்ஸை, அரசு பணிகளில் ஆட்சேர்ப்பு முறைகேடுகள் செய்ததாக கூறி கடந்த 2023 அக்டோபரில் ஒன்றிய அரசு திடீரென பதவி நீக்கம் செய்ததையும் The Lancet இதழ் சந்தேகத்திற்கு உட்படுத்தியுள்ளது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு என்பது இந்தியாவின் மிகவும் வலுவான தரவு ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (IIPS) நடத்திய ஆய்வுகளில் வந்த சில தரவுகள் அரசுக்கு பாதகமானதாக இருந்ததாகவும், ஒன்றிய அரசுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால், முன்னதாகவே K.S.ஜேம்ஸை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக, The Wire செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.
உதாரணமாக, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறி வந்த நிலையில், அதற்கு நேரெதிரான ஆய்வுகளை தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள்(NFHS) அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 19% குடும்பங்கள் எந்த கழிப்பறை வசதியையும் பயன்படுத்துவதில்லை, அவர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நடைமுறையை பயன்படுத்துகின்றனர் என்று NFHS அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் 40% க்கும் அதிகமான குடும்பங்களுக்கு சமையல் எரிபொருள் அணுகலை கொண்டிருக்கவில்லை என NFHS அமைப்பு காட்டியதால், ஒன்றிய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.
‘விக்சித் பாரத் 2047’ – சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் திட்டம் இந்திய அரசின் முக்கிய கொள்கையாக உள்ளது. இந்த கொள்கையை இந்தியா அடைய வேண்டும் என்றால், மக்களுக்கு சேரும் அரசின் சேவைகளே தீர்மானிக்கும்; எனவே இந்தியா சுகாதாரம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என The Lancet சுகாதார ஆய்வு இதழ் கூறியுள்ளது.