கடந்த 2022-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பிரபல அறிவியல் இதழான The Lancet வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
உடல் பருமனால் பாதிக்கப்பட்ட இந்தியக் குழந்தைகளில், சுமார் 73 லட்சம் பேர் ஆண் குழந்தைகள் என்றும் 52 லட்சம் பேர் பெண் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Lancet இதழ் நடத்திய உலகளாவிய பகுப்பாய்வின்படி, உலகளவில் உடல் பருமனுடன் வாழும் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போக்கு, உலகளவில் 1990 முதல் குறைந்த எடை கொண்டவர்களின் எண்ணிக்கைக் குறைந்து, தற்போது பெரும்பாலான நாடுகளில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதைக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில், 2022-ம் ஆண்டு நிலவரப்படி, 19 வயது மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 4.4 கோடி பெண்களும் 2.6 கோடி ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக, The Lancet தெரிவித்துள்ளது.
உடல் பருமன் மற்றும் குறைந்த எடை ஆகிய இரண்டுமே ஊட்டச்சத்து குறைபாட்டின் வடிவங்கள் என்றும் பல வழிகளில் மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளாக இருந்து வருகின்றன.
The Lancet வெளியிட்ட இந்த சமீபத்திய ஆய்வில், கடந்த 33 ஆண்டுகளில் இரண்டு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளின் உலகளாவிய போக்குகள் குறித்து மிகவும் விரிவான தரவுகளை வழங்கியுள்ளது.
உலகளவில் உள்ள இளம் பருவத்தினரிடையே, உடல் பருமன் விகிதம் கடந்த 1990-ல் இருந்ததை விட, 2022-ல் 4 மடங்குகளாக அதிகரித்துள்ளதாக, NCD ரிஸ்க் ஃபேக்டர் கொலாபரேஷன் (NCD-RisC) என்கிற உலகளாவிய விஞ்ஞானிகள் அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளது.
உலகளாவிய உடல் பருமன் விகிதம் பெண்கள் மத்தியில் இருமடங்காகவும், ஆண்களிடயே மூன்று மடங்காகவும் உயர்ந்துள்ளது. மொத்தத்தில், 2022 ஆண்டு நிலவரப்படி, உலகளவில் 15.9 கோடி குழந்தைகள்(1 முதல் 19 வயது வரை) மற்றும் 87.9 கோடி பெரியவர்கள்(19+ வயது) உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
The Lancet’s Research Article: Worldwide trends in underweight and obesity from 1990 to 2022