
தைலாபுரத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாமகவின் செயல் தலைவர் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பாமகவின் நிறுவனரும் தலைவருமான ராமதாஸ்.
* நிறைய பொய்களையும், கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார் அன்புமணி.
*தைலாபுரம் வந்து என்னை பார்த்ததாகவும், அப்போது நான் கதவை சாத்திக்கொண்டதாகவும், பேச மறுத்ததாகவும் சொல்லி வருகிறார் அன்புமனி.
*நான் ஏன் பேச மறுக்கப் போகிறேன். நான் 46 ஆண்டு காலம் உழைத்து, காப்பாற்றி வைத்துள்ள கட்சியை அன்புமணியிடம் கொடுத்து விட வேண்டும். தைலாபுரம் தோட்டத்தில் நான் வாயை மூடிக்கொண்டு யாரையும் சந்திக்கவோ, பேசவோ கூடாது எனும் கட்டளையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

*அன்புமணி சார்பாக சமாதானம் பேச வந்த கட்சி அதிமேதாவிகள் அனைவரும் இதே பல்லவியை பாடியதால்தான் கடைசி பேச்சுவார்த்தையின் போது ’தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
*அதன் பின்னர் அன்புமணி, அவரது அம்மாவை மட்டும் பார்த்துவிட்டு என்னிடம் எதுவுமே பேசாமல் சென்றுவிட்டார். நான் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.
*நான் பாமகவில் 34 அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறேன். அவை கட்சிக்கு துணை அமைப்புகள். அவர்களை எல்லாம் அன்புமணி வளைத்துப் போட்டு காசுகொடுத்து எனக்கு எதிராக எழுதச்சொல்கிறார்.
*அதில் ஒருவர் என்னை விளிக்கும்போது ‘ராமதாஸ்’ என்கிறார். ’ஐயா’ என்று சொல்வதற்கு அவருக்கு கூசினால் ’டாக்டர் ராமதாஸ்’ என்று கூட சொல்லலாம். ஐயா என்று சொன்னவர்களை இன்று ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணிதான்.
*என் மேல் உயிரையே வைத்திருந்த பலரை பணத்தை வைத்து அவர் பக்கம் இழுத்து விட்டார்.
*கட்சிக்கு இப்போது அங்கீகாரமும் இல்லை, சின்னமும் போச்சு. கட்சிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக வரும் தேர்தலில் கட்சியை வழிநடத்துவது என முடிவெடுத்தேன்.
*ஆனால், நான் தான் கூட்டணி முடிவை எடுப்பேன். நான் தான் வேட்பாளரை முடிவு செய்வேன் என்று அன்புமணி பிடிவாதம் செய்ததால்தான் பிரச்சனை.

*நான் உருவாக்கிய கட்சியில் நான் முடிவெடுக்கக் கூடாது என்று என்னை நிர்பந்தம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
*அன்புமணியிடம் கட்சியைக் கொடுத்துவிட்டு நிறுவனர் ஆகிய நான் டம்மியாக தைலாபுரம் தோட்டத்தில் கேட்டை சாத்திக்கொண்டு கொள்ளுப் பேரன்களோடு விளையாடிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
*பாட்டாளி சொந்தங்களை தினமும் சந்திக்காமல் அவர்களோடு தொலைபேசியில் தினமும் பேசாமால் என்னால் இருக்க முடியாது.
*கடைசி மூச்சு இருக்கும் வரையிலும் இந்த ஊமை ஜனங்களுக்காக பாடுபடுவேன்.
*வஞ்சனை , சூது ஆகிவற்றால் கட்சியை உறிஞ்சி எடுத்து, தான் தான் கட்சி என்று சொல்ல துடிக்கிறார் அன்புமணி. அது எப்படி சாத்தியம்? அதனால்தான் நிறுவனர் ஆகிய நான் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டேன்.
*அன்புமணியிடம் கொடுத்த தலைவர் பதவி ஜூன் மாதத்துடன் காலாவதி ஆகிவிட்டது. இப்போது நான் தான் கட்சியின் நிறுவனரும் தலைவரும்.
*அன்புமணிக்கு செயல் தலைவர் என்ற பொறுப்பை கொடுத்தேன். நீ வெளியே போய் மக்களை பார்; நான் அலுவலகத்தில் உட்கார்ந்து கட்சியை கவனிக்கிறேன் என்று சொன்னேன்.
*இதை ஏற்காமல் என்னன்னமோ சொல்கிறார்; என்னென்னமோ செய்கிறார். கூசாமல் பொய் சொல்கிறார்.
*அன்புமணியை தர்மபுரி எம்.பி. ஆக்கியதில் இருந்தே கட்சியின் நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து, உள்ளடி வேலைகளை செய்து வந்திருக்கிறார் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிந்துகொண்டேன்.

*இதை எல்லாம் பொதுவெளியில் பேசக்கூடாதுதான். ஆனால்,பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.
*தந்தையிடமே ஒட்டு கேட்பு கருவி வைத்து கேட்கிறார். உலகத்தில் எங்காவது இப்படி நடந்திருக்கிறதா?
*46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல் பாமகவை வளர்த்து வைத்திருக்கிறேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி அதில் கோடரி செய்து அந்த ஆலமரத்தையே வெட்ட நினைக்கிறார் அன்புமணி.
*அன்புமணி மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் கட்சியை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடுவார். அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
*அன்புமணியிடம் சென்றவர்கள் திரும்ப என்னிடம் வரவேண்டும். பிள்ளைகளை பாசத்துடன் வரவேற்பேன்.