மேலவளவு படுகொலைகள் வழக்கில் சிறையில் இருந்த 13 பேரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்தது அதிமுக அரசு. ஆனால், திமுக அரசு இவர்களையும் விடுதலை செய்ததாகவும், விடுதலை செய்யப்பட்ட இவர்களுக்கு தியாகி பட்டம் எப்போது தரப்போகிறது திராவிட மாடல் அரசு? என்று செய்தி பரவுகிறது. இதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மேலூரை அடுத்த மேலவளவு பஞ்சாயத்து தனி தொகுதியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன் போட்டியிட்டார். வேறு சமூகத்தினர் முருகேசனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி போட்டியிட்டு வென்றார். இதில் ஆத்திரமடைந்த அந்த சாதியினர் முருகேசனை கொன்றுவிட திட்டம் தீட்டினர்.
1997ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவகம் சென்றுவிடு தலித் மக்களுடன் முருகேசன் பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். முருகேசன் உள்ளிட்ட 7 பேரையும் மடக்கி, ஓட ஓட அவர்களை விரட்டி கொலை செய்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், துணை தலைவர் மூக்கன் மற்றும் ராஜா, பூபதி, சவுந்திரராஜன், செல்லதுரை, சேகவமூர்த்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் முருகேசன் தலை துண்டிக்கப்பட்டு அரை கி.மீ. தொலைவில் இருந்த கிணற்றில் வீசப்பட்டிருந்தது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்ட போதிலும் கூட தண்டனை உறுதி செய்யப்பட்டது.
மதுரையில் சிறையில் இருந்த 17 பேரில் 3 பேர் நன்னத்தை விதிகளின் படி அண்ணா பிறந்தநாளில் விடுதலை ஆகி இருந்தனர். 2019ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் கழித்த சிறைவாசிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் சிறையில் இருந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பொல்லான், மேலவளவு குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். அவர் கோரிக்கை விடுத்த நாளில் இருந்தே அதிமுக அரசு குற்றவாளிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
வழக்கமான கொலைக்குற்றம் அல்ல மேலவளவு கொலைகுற்றம். அரசியல் சாசனத்திற்கு சவால் விடுகின்ற விதத்தில் நடந்த சாதிவெறி கொலைக்குற்றம். இந்த குற்றத்திற்கு காரணமான குற்றவாளிகளை விடுதலை செய்தது என்பது சாதியவாதிகளுக்கு ஆதரவான அதிமுக அரசின் நிலைப்பாடு என்று அப்போதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
சாதி ஆணவத்தால் கொலை செய்துவிட்டு 10 வருடங்களில் விடுதலை ஆகிவிடலாம் எனும் எண்ணம் மேலோங்கிவிடும் என்று கண்டனங்கள் எழுந்தன. விடுதலைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. 13 பேரின் விடுதலை அதிர்ச்சி அளிக்கிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது போலவே இக்குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
13 பேரின் விடுதலைக்கு எதிராக 2019ல் பல்வேறு அமைப்புகள் போராடிக் கொண்டிருந்தன. 13 பேரின் விடுதலையை எதிர்த்து விசிக சார்பில் 2019ல் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 197 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
உண்மை நிலை இவ்வாறிருக்க, இந்த 13 பேரையும் திமுக அரசு விடுதலை செய்தது என்றும் இவர்களுக்கு தியாகி பட்டம் கொடுக்கப்போகிறதா திராவிட மாடல் அரசு? என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று திமுக தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.