தணிக்கை சான்றிதழ் கோரி அனுப்பப்பட்ட ஜனநாயகன் படத்தை கடந்த 19ம் தேதி அன்று தணிக்கைக்குழு அதிகாரிகள் பார்த்துள்ளனர். படம் பார்த்து முடித்த பின்னர் இப்படத்தில் 6 இடங்களில் கட் கொடுத்திருக்கிறார்கள். சொன்னபடி 6 இடங்களில் கட் கொடுத்தால் U/A சான்றிதழ் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதையடுத்து படத்தை எடிட் செய்து மறு தணிக்கைக்கு அனுப்பி இருக்கிறது ஜனநாயகன் படக்குழு. ஆனால் படம் திரைக்கு வர மூன்று தினங்களே இருக்கும் நிலையில் இன்னமும் தணிக்கை சான்றிதழ் வரவில்லை என்பதால் திட்டமிட்டபடி படம் ரிலீசாகுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறது படக்குழு. தணிக்கைக் சான்றிதழ் விவகாரத்தில் நடிகர் விஜயோ, படத்தின் இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் உள்பட எவருமே பேசாத நிலையில், தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.
‘’ஜனநாயகன் படத்தை பல வாரங்களுக்கு முன்பே சென்சார் அதிகாரிகள் பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்’’ என்று கூறியிருந்தார் நிர்மல்குமார்.

நிர்மல்குமாரின் இந்த பேச்சு ஒன்றிய பாஜக அரசை குறைசொல்லுவதாக இருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அப்படி என்றால் ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறதா? என்று கேட்டால், ’’ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்தான் அரசியல் செய்கிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.
’’ஜனநாயகன் இயக்குநர் வினோத்தா? நிர்மல்குமாரா? நிர்மல்குமார் கட்சி நிர்வாகி. ஜனநாயகன் பட சம்பந்தப்பட்டவர் இல்லை. அரசியல்வாதி அவர் சினிமா குறித்து கருத்து தெரிவிக்கிறார் என்றால், அரசியல் கட்சி பாஜக ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் செய்தாலும் செய்யலாம்.

மறு தணிக்கைக்கு அனுப்பி சான்றிதழ் கிடைக்க வில்லை என்றால், அதிகாரிகள் சொன்ன 6 கட் விசயத்தை சரிப்படுத்திவிட்டதா படக்குழு என்பது தெரியவில்லை. சான்றிதழ் தர மாதம் ஆகிறது என்றால் அவர்கள் எதிர்பார்த்த ஒன்றை படக்குழு இன்னமும் சரி செய்யவில்லை என்றுதான் அர்த்தம். தணிக்கைக் குழுவுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக தவெக குற்றம் சாட்டுகிறது. தணிக்கைக்குழுவில் இருக்கும் ஒருவர், ஜனநாயகனுக்கு UA சான்றிதழ் கொடுக்கப்படும் என்று விஜய் தரப்புக்கு சொல்கிறார் என்றால், விஜய் தரப்புக்கு தகவல் கொடுக்கும் அளவுக்கு தணிக்கைக்குழுவில் ஒருவர் இருக்கிறார் என்றால், பாஜக தரப்புக்கு தணிக்கை அதிகாரிகளின் நட்பு இருப்பதில் தவறில்லையே? விஜய் தரப்பு ஒரு காரியம் சாதிக்க நினைப்பது தவறில்லை என்றால் மத்திய அரசின் செயலிலும் தவறில்லைதானே. ஜனநாயகன் விசயத்தில் யாரும் அரசியல் செய்யவில்லை. விஜய்தான் அரசியல் செய்கிறார்’’என்கிறார் தெளிவாக.
