கரூர் துயரம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தவெக தலைவர் விஜய் வரும் 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியதன் பெயரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைச்செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மூவரிடமும் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். மூன்று நாள் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிபிஐ காட்டிய ஆடியோ ஆதாரத்தால் திக்கித் திணறியிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. இதையடுத்து விஜய்க்கு சம்மன் அனுப்பி இருக்கிறது சிபிஐ.

கரூர் எஸ்பி மற்றும் டிஎஸ்பி, ஆதவ் அர்ஜூனாவிடம் 20 முறை தொலைபேசியில் அழைத்து, கூட்டத்தை நிறுத்துமாறு கெஞ்சியதற்கான ஆடியோ ஆதாரங்கள் சிபிஐ வசம் உள்ளதாகத் தெரிகிறது. 20 முறை போலீசார் தொடர்பு கொண்டும் ஆதவ் அர்ஜுனா இரண்டு முறை அழைப்புகளை ஏற்றுப் பேசியதாகவும், அப்போதும் கூட அலட்சியப்படுத்திவிட்டார் என்பதற்கான ஆடியோவை காட்டி ஏன் காவல்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினீர்கள்? என்று கேட்டதால், இந்த ஆதார ஆடியோவை கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆதவ் அர்ஜூனா விசாரணையில் திக்கித் திணறியிருக்கிறார்.
விஜயிடமும் இந்த கேள்விகளை சிபிஐ முன்வைக்கும் என்று தெரிகிறது. வேலுச்சாமிபுரத்திற்கு நண்பகல் 12 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ஏன் இரவு 7 மணிக்கு வந்தீர்கள்? வேலாயுதம்பாளையம் தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்தது ஏன்? அனுமதி இல்லாமல் ரோட் ஷோ பல்வேறு இடங்களில் நடத்தி பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியது ஏன்?

கூட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்து தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனிடமும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும், இணைச்செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமாரிடம், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிட காவல்துறை கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் வேலுச்சாமிபுரம் ஜங்சனில் ஏன் வாகனத்தை நிறுத்தி காலதாமதம் செய்தீர்கள்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ முன்வைக்கும் என்று தெரிகிறது.
