
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. துல்கர் சல்மான் நடிப்பில் ‘காந்தா’வாக இப்படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்க்கும் போது பாகவதருக்கும் அவரை வைத்து இயக்கிய இயக்குநருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் காந்தாவின் கதைக்களமாக இருக்கும் போல் தெரிகிறது. காந்தா படம் பாகவதரின் வாழ்க்கை பயணம் என்றே சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
எம்.கே.டி. எனும் எம்.கே.தியாகராஜ பாகவதர் மயிலாடுதுறையில் 1910இல் பிறந்தார். திருச்சியில் வளர்ந்தார். படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்த பாகவதர் சிறு வயதிலேயே நாடகங்களில் நாட்டம் கொண்டு நடித்து வந்தார். பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். இவரின் பொன்னிற மேனியும், கந்தர்வ குரலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. இதனால் சினிமாவில் ஹீரோ ஆனார். நடித்த ‘பவளக்கொடி’ முதல் படமே படு ஹிட் அடுத்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆனார். திரைப்படங்களில் மட்டுமல்லாது கச்சேரிகளிலும் பாடி ஏழிசை மன்னர் என்று கொண்டாடப்பட்டார்.

1940ல் அவர் நடித்த ஹரிதாஸ் படம் 3 தீபாவளியை கடந்து ஓடியது. அந்த சாதனையை இதுவரையிலும் எந்த தமிழ்சினிமாவாலும் முறியடிக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட மனுதரின் வாழ்க்கையை ஒரு கொலை வழக்கு புரட்டி போட்டுவிட்டது. சினிமா பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி எழுதி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த ‘இந்து நேசன்’ பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கின் 8 குற்றவாளிகள் லிஸ்டில் தியாகராஜ பாகவதர் பெயரும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரும் இருந்தது தமிழ்சினிமா ரசிகர்களை அதிரவைத்தது.
4 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு அதில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.
விடுதலைக்கு பின்னர் அவருக்கு முன்பு இருந்தது போல் செல்வாக்கு இல்லை. செல்லாக்காசு ஆனார். வசூல் மன்னனாக இருந்த பாகவதரின் படங்கள் முன்பு போல் ஓடவில்லை. இதில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் கண்பார்வை மங்கியதால் சொந்த ஊர் திருச்சிக்கே சென்றுவிட்டார்.

புகழின் உச்சியில் இருந்தபோது தங்க தட்டில் சாப்பிட்டு வந்த பாகவதர் இறுதிக்காலத்தில் வறுமையில் வாடினார். எளிய குடும்பத்தில் பிறந்தாலும் எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தவர்.
திருச்சியில் அவர் கட்டிய ‘ஆனந்த பவனம்’ மாளிகை திறப்பு விழாவுக்கு தமிழகமே திரண்டு வந்தது. பாகவதரின் மறைவுக்கு பின்னர் அந்த மாளிகை ஒரு பஸ் அதிபருக்கு சொந்தமாகி, அதன் பின்னர் திருமண மண்டபம், கலையரங்கம் ஆனது.
சிவகாமி படத்தில் நடித்த போது உடல்நிலை நலிவுற்று வாயசைக்க முடியாது போனது. இதனால் மன அமைதி தேடி திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரகாரத்தில் தினமும் அமர்ந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
மொட்டை அடித்து, கண் பார்வை மங்கி கோவிலில் உட்காந்திருக்கும் முதல் சூப்பர் ஸ்டாரின் கோலம் சகியாத ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற சம்மதித்தார். சிகிச்சை பலனின்றி 1959இல் தனது 49ஆவது வயதில் மறைந்தார். அவரது உடல் திருச்சியில் அடக்கம் செய்யப்பட்டது.
1935 தொடங்கி 60கள் வரையிலும் பாகவதர் ஜிப்பாவும், பாகவதர் கிராப்பும் பிரபலம். தினமும் புத்தாடை அணியும் வழக்கம் கொண்ட பாகவதர் வந்தால் தகதகவென்று மின்னும் என்பார்கள். அந்த இடத்தில் நறுமணம் வீசும் என்பார்கள். அவர் சென்ற பின்னர் அந்த இடத்தில் 10 நிமிடத்திற்கு அத்தர் மனம் வீசுமாம்.
அவர் மறைந்து 66 ஆண்டுகள் ஆனாலும் அவரின் புகழ் மணம் வீசிக்கொண்டிருக்கிறது.