தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி தவெகதான் என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார்.
அவர் மேலும், ‘’கூட்டணி இல்லாது தனித்த திமுகவுக்கு 20 சதவிகிதம்தான் வாக்குவங்கி உள்ளது. அதே போன்று அதிமுகவுக்கு 19.5 சதவிகிதம்தான் உள்ளது. தவெகவுக்கு 30 சதவிகிதத்திற்கு மேலான வாக்குவங்கி இருப்பதாக பல சர்வே ரிப்போர்ட்கள் வந்துள்ளன. மக்களின் செல்வாக்கும் அன்பும் பெற்று தனிப்பெருங்கட்சியாக தவெகதான் உள்ளது. 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு தவெகவுக்கு மக்களின் ஆதரவு இருக்கும்.

யாரையும் முதல்வராக்க தவெக தொடங்கப் படவில்லை. எங்கள் தலைவர் விஜயை முதல்வராக்க மட்டும்தான் மக்கள் ஆதரவு தருகிறார்கள். மாற்றத்தை வேண்டி எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்றுதான் போகும் இடமெல்லாம் மக்கள் கண்ணீரோடு நிற்கிறார்கள்’’ என்று செங்கல்பட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் நிர்மல்குமார் .

நிர்மல்குமாரின் பேச்சுக்கு குட்டு வைக்கும் விதமாகவே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பொள்ளாச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர், ‘’ஜோசப் விஜய் கட்சி கொங்கு மண்டலத்தில் ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தி திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று நிறுவ முயற்சித்திருக்கிறார் விஜய். அந்த கூட்டம் படு தோல்வி அடைந்திருக்கிறது. கொங்கு மண்டலத்தில் இருக்கும் 70 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும். விஜயை பார்ப்பதற்குத்தான் கூட்டம் கூடுகிறது. தேர்தலில் அது கை கொடுக்காது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
