வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கம் மற்றும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
எண்ணெய் கப்பல் கைப்பற்றல் :
அமெரிக்கா, வெனிசுலா கடற்கரையில் (Skipper) என்றழைக்கப்படும் ஒரு பெரிய எண்ணெய் கப்பலை (supertanker) கைப்பற்றியுள்ளது. டிசம்பர் 10, 2025 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை அறிவித்தார். இது நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான வாஷிங்டனின் அழுத்த பிரச்சாரத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

கப்பல் மற்றும் சரக்கு:
Skipper என்ற இந்தக் கப்பல், சுமார் 2 மில்லியன் பேரல் எண்ணெய் கொள்ளளவு கொண்டது. இந்தக் கப்பல், தடைசெய்யப்பட்ட வெனிசுலா (Venezuela) கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றுள்ளது. அதில் பாதி சரக்கு கியூபாவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் இறக்குமதியாளருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
கைப்பற்றியதற்கான காரணம்:
இந்தக் கப்பல், “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் சட்டவிரோத எண்ணெய் கப்பல் வலையமைப்பின்” ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டதால் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை:
அமெரிக்க கடலோர காவல்படை தலைமையிலான இந்த நடவடிக்கையில், USS ஜெரால்ட் ஃபோர்டு விமானம் தாங்கி கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் கப்பலுக்குள் இறங்கி கட்டுப்படுத்தினர்.
இடம் மறைப்பு:
கப்பலின் இருப்பிடம் காட்டும் கருவி (transponder) அது கயானா மற்றும் சுரினாம் அருகே நங்கூரமிட்டுள்ளதாகக் காட்டியுள்ளது. ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அது வெனிசுலாவின் ஜோஸ் எண்ணெய் முனையத்தில் எண்ணெயை ஏற்றிக்கொண்டிருந்ததை உறுதிப்படுத்தின.
அதிபர் டிரம்ப் பேச்சு :
கப்பலில் உள்ள எண்ணெய் என்னவாகும் என்று கேட்டபோது, “நாங்கள் அதை வைத்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன்” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

“சர்வதேச கடற்கொள்ளையர் செயல்”
வெனிசுலா அரசாங்கம் இந்த நடவடிக்கையை “வெட்கக்கேடான திருட்டு மற்றும் சர்வதேச கடற்கொள்ளை செயல்” என்று கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், சர்வதேச அமைப்புகளில் அமெரிக்காவைக் கண்டிக்கவும் சபதம் செய்துள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்து:
இந்த கைப்பற்றல் மற்ற கப்பல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பலர் வெனிசுலா கடற்பரப்பில் பயணம் செய்வதைக் கைவிடக்கூடும் என்றும் இது வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் குறுகிய கால தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் முக்கிய நோக்கம்:
ஈரான் மற்றும் வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது, இந்த நடவடிக்கைகளின் மூலம் வெனிசுலாவின் பொருளாதாரத்தையும், ரஷ்யா போன்ற நாடுகளின் உதவியையும் கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது, குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொருளாதாரத் தடைகளை மீறுவதைக் காரணம் காட்டியது.இது வெனிசுலாவின் இறையாண்மை மீதான அத்துமீறலாகக் கருதப்பட்டாலும், அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு என்ற பெயரில் வெனிசுலாவின் எண்ணெய் சார்ந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
