
இது தேர்தல் வரும் நேரம் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரப் பயணத்தை இப்போதே துவங்கிவிட்டனர். ‘மக்களை காப்போம்! தமிழகத்தை மீட்போம்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதே போன்று பல தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை அறிவித்திருக்கிறார்.
பாமக (செயல்) தலைவர் அன்புமணி ராமதாசும் ’உரிமை மீட்க; தலைமுறை காக்க’ என்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். நாளை ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரையிலும் 100 நாட்கள் இந்த பயணத்தை அவர் மேற்கொள்கிறார். திருப்போரூரில் தொடங்கி தருமபுரி வரையிலும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் அன்புமணி ராமதாஸ்.

இந்த நிலையில், அன்புமணியின் இந்த சுற்றுப்பயணத்திற்கு ராமதாஸ் திடீர் எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
கட்சியின் நிறுவன தலைவராக இருக்கும் ராமதாஸ், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி என்றும், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் என்றும் நியமித்து மேலும் புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ராமதாஸ் தெரிவிக்கிறார். ஆனால் அன்புமணியோ, தான் பாமகவின் தலைவர் என்ற முறையில் நடந்துவருகிறார். அதனால் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதை எடுத்துச் சொல்கிறார்.
மேலும், அன்புமணியின் இந்த சுற்றுப்பயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று டிஜிபிக்கு புகார் அளித்துள்ளார் ராமதாஸ்.
அன்புமணி தனது சுற்றுப்பயணத்தின் போது, பாமக கொடியை பயன்படுத்தக்கூடாது என்றும், பாமகவின் நிர்வாகிகளை சந்திக்கக்கூடாது என்றும் டிஜிபிக்கு அளித்திருக்கும் புகாரில் கூறியிருக்கிறார் ராமதாஸ்.
தந்தை – மகன் மோதலில் ராமதாஸ் எடுத்திருக்கும் இந்த அதிரடியால் ஆடிப்போய், செய்வதறியாது கலங்கி நிற்கிறார் அன்புமணி.