சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபாடு செய்ய சாதி இந்துக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்துசமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறையின் அனுமதியுடன் அவர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ’’மாரியம்மனை வழிபட விரும்பும் தலித்துகளும் இந்துக்கள் தான். ஆனால் சாதி இந்துக்கள் சாதி பாகுபாட்டோடு செயல்படுவதை இந்து மதம் அனுமதிக்கிறது.
விடுதலைச்சிறுத்தைகள் இந்த சாதியக் கொடுமைகளையும் பாகுபாட்டையுமே எதிர்க்கிறோம். அந்த வகையில், சாத்தப்பாடி மாரியம்மன் கோவிலுக்குள் இன்று தலித் மக்களை அழைத்துச்சென்றோம். கோவிலுக்குள் வழிபாடு செய்தோம்.
வழிபாட்டுரிமையை நடைமுறைப்படுத்திய இந்து அறநிலையத்துறைக்கும் காவல்துறைக்கும் நன்றி.’’ என்று தெரிவித்துள்ளவர், ’’வழிபாட்டுரிமை போராட்டம் தொடரும்’’ என்று அறிவித்துள்ளார்.
அதற்கு காரணம், தீவப்பட்டிப்பட்டி பிரச்சனை இன்னமும் தீர்ந்தபாடில்லை. சேலம் மாவட்டம் தீவப்பட்டியில் இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பட்டியலின மக்கள் மீது போலீசாரால் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை இன்று ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலையில் சந்தித்து ஆறுதல் கூறினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’குளித்துக் கொண்டிருந்த பெண்களை உள்ளே புகுந்து அடித்து இழுத்து வந்திருக்கிறார்கள். இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டு கோவில் வழிபாட்டு உரிமையினை மீட்டெடுக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையினை முன் வைத்துள்ளார்.