
எவ்வளவுதான் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்கச் சொல்லி அழுத்தங்கள் வந்தாலும் அவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என்று பிடிவாதமாகவே இருக்கிறார் பழனிசாமி. அவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டால் வெற்றி எளிதாகும் என்று சொல்லும் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், எல்லோரும் இணைய வேண்டும் என்பதுதான் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் எண்ணமாக இருக்கிறது. ஆனால் பழனிசாமியிடம் வெளியே சொல்ல முடியாமல் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.
இது குறித்து பழனிசாமிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் பூங்குன்றன் சங்கரலிங்கம்.
‘’நான், அம்மாவின் தொண்டன், இன்று உங்கள் தொண்டன், மனம் திறந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த கடிதம் உணர்ச்சி, அன்பு மற்றும் நம்பிக்கையை முழுமையாக பிரதிபலிக்கும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக தாங்கள் சிறப்பாக செயலாற்றி வருகிறீர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நான்தான் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். நாங்களும் மனப்பூர்வமாக உங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கழகம் வெற்றி பெற்று, நீங்கள் முதலமைச்சராக வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனுடைய அவா!
இன்றைய சூழ்நிலையில், கழகத்திலிருந்து பிரிந்து சென்ற தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டால், வெற்றி எளிதாகும்”, இதை மக்கள் சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் இதை உணர்ந்திருப்பதினால் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பொறுப்பில் உள்ளவர்கள் தனக்கு நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டு, வெளியில் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒரே நோக்குடன் செயல்பட்டால் வெற்றி உறுதி. அந்த வெற்றியை நீங்கள் ருசிக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற கடைக்கோடி தொண்டனுடைய வேண்டுதல்.
நாங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வெற்றியை விரும்புகிறோம். உங்களுடைய வெற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி. அது எங்களுடைய வெற்றி! நீங்கள் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும். அம்மா அவர்களின் கொள்கைகளை தொடர வேண்டும்!

நாங்கள் சொல்வதெல்லாம் உங்கள் நலனுக்காக மட்டுமே! நான் நேற்றல்ல, இன்றல்ல, நாளையும் கழகத்திற்கான நல்லவற்றை சொல்லிக் கொண்டிருப்பேன். கழகத்திற்கு நல்லதைச் செய்யும் எந்தக் கருத்தாக இருந்தாலும் புரட்சித்தலைவிக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது கடமை! அதை நான் சரிவரச் செய்ததால் தான் புரட்சித்தலைவி அவர்களோடு என்னால் இவ்வளவு நாட்கள் பயணிக்க முடிந்தது என்பது உங்களைப் போன்ற உண்மை விசுவாசிகளுக்குத் தெரியும். புரட்சித்தலைவி அவர்களுடன் பயணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, அவருடைய நம்பிக்கையைப் பெறுவது எவ்வளவு சிரமம் என்பதும் உங்களுக்குப் புரியும். அன்றிருந்த அதே மனப்பான்மையோடு இன்றும் தங்களுக்கு எனக்கு தெரிந்தவற்றை சொல்லவே விழைகிறேன்.
நாங்கள் உங்கள் தொண்டர்கள், துணை நிற்பவர்கள், முழு ஆதரவாளர்கள். உங்கள் வெற்றி நிச்சயம். மக்களுக்கான ஆட்சியை கழகம் தர வேண்டும். புரட்சித்தலைவி அவர்களின் கொள்கையும், புரட்சித்தலைவருடைய எண்ணமும் அதுவே!
“பழனி வாழ் சுவாமியின்” பித்தனான நான், இந்த பழனிச் சாமியின் ஆட்சி மலர வேண்டும் என்ற ஆசையில் எழுதுகிறேன். தவறு இருந்தால் மன்னித்து, உணவில் இருக்கும் கல்லை தூக்கி எறிந்துவிட்டு, உணவை உண்பது போல நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.’’என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த கடிதத்தினை பகிர்ந்துள்ள பூங்குன்றன், ‘’குறிப்பு: இதை பார்த்து எதிர்மறையான எண்ணங்களை, “இணைய வேண்டும்” என்ற விருப்பமுள்ளவர்கள் விதைக்க மாட்டார்கள்’’ என்றும் பதிவிட்டுள்ளார்.