
தன்னை சீண்டும் விதமாக பேசிய அன்புமணிக்கு ’’நம்மள கலாய்க்குறாங்களாம்..’’ என்று சொல்லி பதிலடி கொடுத்திருக்கிறார் திருமாவளவன்.
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ’’மாநாடு முடிந்து அனைவரும் அமைதியாக, பாதுகாப்பாக திரும்புங்கள். மற்ற தலைவர்களைப் போல் நான் அத்துமீறு என்று சொல்ல மாட்டேன். நீ அமைதியாக இரு. எந்த பிரச்சனையும் செய்யாமல் வீடு போய் சேரு. என் தம்பியோ தங்கையோ ஒரு வழக்கு கூட வாங்கக்கூடாது. பத்திரமாகப் போ. படி, வேலைக்கு போ, அப்புறம் கட்சி வேலைகளைப் பாரு. இனமே எழு! உரிமை பெறு!’’ என்று கட்சித் தொண்டர்களுக்குச் சொன்னார்.
மற்ற தலைவர்களைப் போல் நான் அத்துமீறு என்று சொல்ல மாட்டேன் என்று சொன்னதுமே அவர் திருமாவைத்தான் சீண்டும் விதமாகச் சொல்கிறார் என்று புரிந்துகொண்டு பாமகவினர் உரக்க குரல் எழுப்பினர்.

அன்புமணியின் இந்த பேச்சுக்கு சேலத்தில் நடந்த விசிக கூட்டத்தில் பேசியபோது பதிலடி கொடுத்திருக்கிறார் திருமாவளவன்.
’’அமைப்பாவதால் மட்டுமே அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே அடக்குமுறைகள் உடையும். இந்த அத்துமீறலுக்கு பொருள் என்னவென்று தெரியாமல் சிலபேர், ‘நான் அத்துமீறு என்றெல்லாம் சொல்லமாட்டேன். அதை செய் இதை செய் என்றெல்லாம் சொல்லமாட்டேன் என்று சொல்லி நம்மள கலாய்க்கிறாங்களாம்.
‘அத்து மீறு’ என்றால், எங்கே அடக்குமுறைகள் இருந்தாலும் அந்த அடக்குமுறையை எதிர்த்து நீ போராடுவதற்கான போர்க்குணத்தைப் பெறு என்று பொருள்’’ என்று அன்புமணிக்கு பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய திருமா, ‘’போகுற இடமெல்லாம் சுற்றி நின்று கூட்டம் நசுக்குறாங்க. உண்மையிலேயே நசுக்கப்பட்டவன் நான் தான். தினந்தோறும் நசுக்கிக்கிட்டே இருக்காங்க. ஒவ்வொரு ஆளும் 100 கிலோ. 10 பேர்னா ஒரு டன். இந்த பக்கம் ஒரு டன் அந்த பக்கம் ஒரு டன் நாலு பக்கமும் இருக்கும் 4 டன்’னை தாக்குப்பிடிச்சு தள்ளிக்கிட்டு வெளியே வரணுமுன்னா நான் 10 டன் சக்தி உள்ளவனா இருந்தாதான் அது முடியும்.

நான் நடக்கும்போது எல்லோரும் சேர்ந்து நடந்தா இயல்பா போயிடலாம். எதிரே வந்து நெஞ்சுல கை வச்சு தள்ளுறாங்க. நான் சைவமாக மாறி 25 வருசம் ஆச்சு. வெறும் சோத்துல என்ன சக்தி வரும். வெறும் சோறு சாம்பாரு,ரசம் அவ்வளவுதான். எலும்புக்கு சக்தி ஏறக்கூடிய வேறு எதுவும் நான் சாப்பிடுறது இல்ல.
அண்ணன போட்டு நசுக்கக்கூடாது. இத யாரும் நினக்கிறது இல்ல. நான் கீழே விழுந்துட்டா அவ்வளவு பேரும் என் மேல ஏறிடுவான். போட்டு மிதி மிதின்னு மிதிச்சுடுவாங்க. முடிஞ்சுது கதை. அதனால கீழ விழாத அளவுக்கு நான் பேலன்ஸ் பண்ணி நிக்கணும். அதுக்கு எனக்கு ஒரு சக்தி தேவைப்படுது’’ என்று சிரித்தபடியே பேசினார்.
விசிகவினரும் திருமா பேச்சில் விழுந்து விழுந்து சிரித்தனர்.