ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை முழக்கத்தினை மீண்டும் எழுப்பத் தொடங்கிவிட்டனர் விசிகவினர். இதை கவனத்தில் வைத்துதான், கூட்டணியில் பங்கு பெரும் அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு- அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார் தவெக தலைவர் விஜய்.
விசிகவின் கோரிக்கையினை தவெக ஏற்றுக்கொண்டது போன்றும், விசிகவை தவெக கூட்டணிக்கு அழைக்கும் விதமாகவும் விஜய்யின் அந்த அறிவிப்பு அமைந்தது முதல் திருமாவளவன் தவெக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர், திருமாவளவனும் விஜய்யும் துணை முதல்வர்கள் என்று பரபரப்பு செய்திகள் பரவி வருகின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைகிறது, விசிக துணை பொதுச்செயலாளர் அ ஆதவ் அர்ஜூன் நிறுவனம் வெளியிடும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலினை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு என்று செய்திகள் பரவுகின்றன.
ஆனால், “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா?’’ என்று கொந்தளிக்கிறார் திருமாவளவன்.
சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம்! எனும் தலைப்பில் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திமுக கூட்டணியை உடைக்க சதி செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். ’’திமுக கூட்டணியை சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பேயாகும். குறிப்பாக, திமுக’வைப் பிடிக்காதவர்கள்.திமுக – விசிக இடையே உரசலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். ’’ என்கிறார்.
’’த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்யோடு நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல்வெளியீட்டு விழாவில் அரசியல் சாயம்பூசி நம்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சதிதிட்டம் தீட்டுகின்றனர். நமது கூட்டணியின் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்கின்றனர்.
திட்டமிட்டே நம்மீது அய்யத்தை எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும். அத்தகைய நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது’’ என்று விசிகவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.