அந்த 45 நிமிடங்கள் சந்திப்பில் நடந்தது என்ன? என்பது குறித்து கசியும் தகவல்கள் உண்மைதானா? இல்லை, உண்மையிலேயே அந்த சந்திப்பில் நடந்தது என்ன? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
விசிகவில் இருந்தபோது திமுகவை கடுமையாக எதிர்த்து வந்ததால் ஏற்பட்ட அதிருப்தியினால்தான் கட்சியில் இருந்து வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா. இதன் பின்னர் அவர் அதிமுகவில் இணையப்போவதாகவும் தவெகவில் இணையப் போவதாகவும் செய்திகள் வந்த நிலையில் அவர் தவெகவில் இணைந்துள்ளார். அக்கட்சியில் அவருக்கு தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்து தமிழக அரசியல் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. தவெகவில் இணைந்ததுமே அவர் திருமாவளவனை சந்தித்ததுதான் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக இதை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
திமுகவை எதிர்ப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, திமுகவை எதிர்ப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் விஜய்யுடன் இணைந்திருக்கும் நிலையில், எப்படி ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்து சொல்கிறார் திருமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதற்கு திருமா, ‘’பெரியார் – அம்பேத்கர் கொள்கைகளை பேசும் கட்சியாக தவெக இருக்கிறது. விசிக பேசும் அதே கொள்கைகளை தவெகவும் பேசுகிறது. அதனால்தான் அக்கட்சியில் இணைந்தேன் என்று சொன்னார் ஆதவ்’’ என விளக்கம் கொடுத்தார்.
ஒருவேளை ஆதவ், பாஜகவில் இணைந்திருந்தாலும் வரவேற்று வாழ்த்து தெரிவித்திருப்பாரோ? என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது திருமா சொன்ன இன்னொரு விளக்கம்.
‘’சிலர் கட்சியை விட்டு வெளியேறியவுடன் கட்சியின் மீதான பிம்பத்தை சிதைக்க நினைப்பார்கள். ஆனால், ஆதவ் அப்படி எல்லாம் செய்யவில்லை.
ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ, விலக்கி வைக்கப்பட்டாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே உள்ளது. கட்சியை விட்டு வெளியேறும் சூழல் வந்தபோதிலும் அதை பகையாக கருதாமல், இன்னொரு கட்சியின் இணைந்து பொதுச்செயலாளர் பதவி பெற்றாலும் கூட வாழ்த்து பெற வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். தமிழக அரசியலில் ஆதவ் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார்’’ என்று திருமா அளித்த விளக்கம்தான் ஒருவேளை ஆதவ், பாஜகவில் இணைந்திருந்தாலும் வரவேற்று வாழ்த்து தெரிவித்திருப்பாரோ? என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா மூலம் தவெகவுடன் கூட்டணிக்கணக்கு போடுகிறாரா திருமா? என்ற கேள்விகு, ‘’எந்த அரசியல் கணக்கும் இல்லை; முடிச்சும் இல்லை’’ என்றார். ஆனால், தவெகவுடன் கூட்டணி கணக்குதான் ஆதவ் அர்ஜூனாவை அவர் சந்தித்தது என்றும், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த சந்திப்பை நிகழ்த்தி உள்ளார் திருமா என்றும் இருவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
’’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு திருமா பங்கேற்காததால், ‘’அவர் வராவிட்டாலும் அவரோ மனசு எல்லாம் நம்ம கூடதான் இருக்கும்’’ என்று சொல்லி இருந்தார் விஜய்.
விசிகவின் கொள்கைகளையே கொண்டிருந்ததால் தான் தவெகவில் இணைந்தேன் என்று ஆதவ், திருமாவிடம் சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ‘’எந்த முடிச்சும் இல்லை’’ என்றாலும் ‘’முடிச்சு’’இருப்பது போலவே தெரிகிறது.
திருமாவை சந்தித்து எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலினை கொடுத்து வாழ்த்து பெற்றதோடு அல்லாமல் திருமாவுடன் ஆதவ் அர்ஜூன் 45 நிமிடங்கள் தனியே சந்தித்து பேசி இருக்கிறார். தேர்தல் வியூகம் குறித்து ஆதவ் சொன்னார் என்று விசிக தரப்பில் இருந்து தகவல் பரவுகிறது.
உண்மையிலேயே இது அந்த 45 நிமிடங்கள் சந்திப்பில் இதுதான் நடந்ததா? இல்லை, தனக்கு திமுக விரோதி என்பதால் திமுகவை வெறுப்பேற்றும் விதமாக, வரப்போகும் தேர்தலில் விசிக எத்தனை சீட் கேட்க வேண்டும் என்று திருமாவுக்கு தூபம் போட்டாரா ஆதவ்? இல்லை, தவெக – விசிக கூட்டணிக்கு அடித்தளமிட்டாரா? என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், ‘’வேறொரு கட்சியில் இணைந்த பிறகு அன்றைக்கு மாலையே விலகிய கட்சியின் தலைவரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற ஒரே அரசியல் ஆச்சரியம்
ஆதவ் அர்ஜுனா தான். அதுசரி கூட்டணிக்கான வியூகத்தை நிமிடம் தாமதிக்காமல் முன்னெடுக்கிறார் அப்படித்தானே..?’’ என்று கேட்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
தவெகவில் ஆதவ் அர்ஜூனா இணையப்போகிறார் என்பதை முதல் நாளே, ‘’ அந்த “விஜய்”யன் எனப்படும் அர்ஜீனனோடு சூரியனை ஆள வைக்க அன்று சுழன்றுழைத்த ஆதவ அர்ஜுனனே.. நாளை வில்லேந்தும் விஜயனுக்கு வியூகம் வகுக்குறாராம்.. அப்ப 2026 களம் மெர்சல் தான் போ…’’ என்று சொன்னவர் மருது அழகுராஜ்.