லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் குழுவில் இருந்து வந்தார். அதிலிருந்து வெளியேறி ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ என்ற தனி நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலமாக விசிகவுக்கு களப்பணிகளை செய்து வந்த ஆதவ் அர்ஜூனா விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆனார்.
’’ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும்’’ என்று ஆதவ் அர்ஜூனா எழப்பிய குரல் திமுக கூட்டணியில் புயலை வீசியது. ஆதவ் அர்ஜூனா வைத்த கோரிக்கை விசிகவின் நெடுநாளைய கோரிக்கை தானே அதைத்தானே சொன்னார் என்று பலரும் சொல்ல, ஆதவ் அர்ஜூனாவால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று விசிகவினர் வருந்த, ஆட்சியில் பங்கு வேண்டும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று இப்போது நான் கேட்கவில்லை. விசிகவின் நெடுநாளைய கோரிக்கை இது எங்களின் எதிர்கால திட்டம் என்று விளக்கம் கொடுத்தார் ஆதவ் அர்ஜூனா.
விசிகவின் கொள்கையைத்தான் பேசினார் ஆதவ் அர்ஜூனா. ஆனால் அதைச் சொல்லுவதற்கு இடம் பொருள் ஏவல் வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனாவிற்கு உணர்த்தினார் திருமாவளவன்.
இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், ‘’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’’ எனும் நூலினை விகடன் பிரசுரத்துடன் இணைந்து தனது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் வெளியிட ஏற்பாடு செய்தார் ஆதவ் அர்ஜூனா. தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட, விசிக தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொள்வது என்று முடிவானது. இதனால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்தது.
தவெகவுடன் விசிக கூட்டணி அமைக்கப்போகிறது. அதனால்தான் விஜய்யுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார் திருமாவளன் என்ற பேச்சு எழுந்தது. இதுகுறித்த சலசலப்புகள் அதிகரித்த போது, ‘’விழாவில் நான் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி அறிவிப்பேன்’’ என்றார் திருமாவளவன்.
தலைவர்தானே முடிவெடுக்க வேண்டும். இவர் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு சொல்கிறேன் என்கிறாரே ? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் நாளை இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விஜய் நூலினை வெளியிட, மேனாள் நீதிபதி கே.சந்துரு பெற்றுக்கொள்கிறார்.
திருமாவளவன் விழாவை புறக்கணித்துவிட்டார் என்று செய்திகள் பரவ, விசிகவின் துணைபொதுச்செயலாளர் வன்னி அரசு மறுத்துள்ளார். ‘’அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எமது தலைவர் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார்.
ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும்’’ என்கிறார்.
இந்த விவகாரம் விசிகவில் பெரும் புயலாக வீசிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், விசிக எம்.எல்.ஏ எஸ். எஸ். பாலாஜி, ’’துடுப்பு போடாமல் படகில் கேளிக்கைக்காக அமர்ந்து இருப்பவனால் மட்டுமே படகை உலுக்கி நிலைகுலைய செய்ய முடியும்’’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலாஜி சொல்வது ஆதவ் அர்ஜூனாவைத்தான் என்று விசிகவினர், அந்த பதிவுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றார்கள்.