
தணிக்கைக்குழுவின் கெடுபிடிகளால் இனிமேல் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ’பேட் கேர்ள்’ படம்தான் தனது தயாரிப்பின் கடைசிப்படம் என்றும் அறிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் ‘பேட் கேர்ள்’ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானபோது கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக சித்தரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நீதிமன்றம் வரை சென்றது. பள்ளி சிறுவர், சிறுமிகள் குறித்த ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த படத்தை டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
பல்வேறு தடைகளைத் தாண்டி இப்படம் வரும் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு இயக்குநர் வெற்றி மாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘’பதின்பருவத்தில் ஆண்கள் சந்திக்கும் நிகழ்வுகளை அழியாதகோலங்கள், துள்ளுவதோ இளமை போன்ற படங்கள் காட்டி இருக்கின்றன. அதே பதின்பருவத்தில் பெண்கள் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லும் படம் பேட் கேர்ள்.

கடன் வாங்கி படம் எடுக்கும் போது இது போன்று சிக்கல் வந்தால் சமாளிப்பது சவாலாக உள்ளது. ஏற்கனவே நான் தயாரித்த ‘மனுசி’ படம் கோர்ட்டுக்கு போயிருக்கிறது. அடுத்தடுத்து சிக்கல்களால் ஒரு தயாரிப்பாளராக என்னால் சமாளிக்க முடியவில்லை. இயக்குநராக இருந்து விடவே அதனால் எனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியின் கடைசிப்படமாக பேட் கேர்ள் படம்தான் இருக்கும். கடையை இழுத்து மூடுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.