
அவர் நினைத்திருந்தால் அந்தக் கேள்வியை கடந்து போயிருக்கலாம். ஆனால் அப்படிச் செல்ல அவர் முயற்சிக்கவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு ‘கூட்டணி ஆட்சி’குறித்த கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.
ஏற்கனவே கூட்டணி ஆட்சி விவகாரம் அதிமுக – பாஜக இடையே பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அண்ணமலை ஊற்றிய எண்ணெய்யில் கொழுந்து விட்டு எரிகிறது. இதற்கு மேலும் சமாளிக்க முடியாமல்தான் நேரடியாகவே அமித்ஷாவுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் பழனிசாமி.
அதிமுக – பாஜக கூட்டணியை அறிவிப்பதற்கு முன்பே டெல்லியில் பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பிறகு, ‘தமிழ்நாட்டில் 2026இல் என்.டி.ஏ. ஆட்சி அமையும்’ என்று அறிவித்தார் அமித்ஷா. இதையடுத்து சென்னையில் அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு நிகழ்விலும் கூட, ’கூட்டணி ஆட்சி’ தான் என்பதை அறிவித்தார் அமித்ஷா. அதுவும் பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இதை அறிவித்தார் அமித்ஷா.

அமித்ஷா அப்படிச் சொல்லவில்லை. அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று அதிமுகவினர் எவ்வளவோ போராடி சமாளித்துக் கொண்டிந்த வேளையில், கேரளாவில் பேசியபோதும் தமிழகத்தில் 2026இல் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்தினார் அமித்ஷா.
வேறு வழியில்லையே சமாளித்துதானே ஆகவேண்டும். அதனால்தான், அமித்ஷா சொன்ன வார்த்தைகளை பிரித்து, எங்கள் ’கூட்டணி’ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொன்னாரே தவிர ’கூட்டணி ஆட்சி’ என சொல்லவில்லை என்று, அமித்ஷா சொன்னதற்கு புதிய அர்த்தம் கொடுத்து சமாளித்துக் கொண்டிருந்தார் பழனிசாமி. அதிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார் அண்ணாமலை.
அவர் நினைத்திருந்தால் அந்தக் கேள்வியை கடந்து போயிருக்கலாம். ஆனால் அப்படிச் செல்ல அவர் முயற்சிக்கவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு ‘கூட்டணி ஆட்சி’குறித்த கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலை சொன்ன பதிலை மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான பதில் – சரியான பதில் என்றே தெரியும். உள்ளார்ந்து பார்த்தால் அதில் விஷமத்தனம் இருப்பது புரியும். இதே கேள்வியை பாஜகவில் இருக்கும் வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் கூட்டணிக்கு சாதகமாகவே பூழி மெழுகி பேசி இருப்பார்கள். ஆனால் கூட்டணிக்கு பாதகம் வரும்படியே உடைத்து பேசி இருக்கிறார் அண்ணாமலை.
‘கூட்டணி ஆட்சி’ தான் என்று ஒருமுறை அல்ல; மூன்று முறை கூறியிருக்கிறார் அமித்ஷா. என் தலைவார் தெளிவாக இப்படிச் சொல்லி இருக்கும் போது கூட்டணி ஆட்சி இல்லை என்று நான் சொல்ல முடியாது. நான் அப்படிச் சொன்னால் அது கட்சியில் ஒரு தொண்டனாக இருக்க தகுதியாக இருக்காது. என் தலைவர்கள் சொன்ன கருத்தை வலுப்படுத்தாமல் அதில் சந்தேகம் எழுப்பினால் தொண்டனாக இருக்க எனக்கு தகுதியில்லை. அமித்ஷா சொன்ன கருத்தில் அதிமுகவுக்கு மாற்று கருத்து இருக்குமேயானால் அவருடன் அவர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் அண்ணாமலை. ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது மாதிரி ஆகிவிட்டது அண்ணாமலையின் இந்த பதில்.

’கூட்டணி ஆட்சி’ என்பதில் பாஜக ஒரு முடிவோடுதான் இருக்கிறது. ஆனால் இதே போக்கில் சென்றால் அதிமுக தொண்டர்களிடையே தனக்கு செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறார் பழனிசாமி. அதே நேரம் அண்ணாமலை சொன்னது மாதிரி, அமித்ஷாவுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து இது குறித்து பேசி முடிவெடுக்கும் கால சூழலும், அதிகாரமும் இல்லாததால் அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி கனவுக்கு வேட்டு வைக்கும்படி, ‘’அதிமுக கூட்டணியில் விரைவில் பிரம்மாண்ட கட்சி இணையும்’’ என்று அறிவிப்பு செய்திருக்கிறார் பழனிசாமி.
பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு பிறகு அந்த பிரம்மாண்ட கட்சி எது? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. தவெகவைத்தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார் என்றும், காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்கிறார் பழனிசாமி. அந்த கட்சியைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவுகின்றன.

தவெகவுடன் கூட்டணி அமைக்க முயற்சியா? என்ற கேள்விக்கு, ’ஆமாம்’ என்று பதில் சொல்லாமல், தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது என்று சுற்றி வளைத்து பதில் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. நின்றுபோன அதிமுக – தவெக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியிருப்பதால்தான் அதிமுக பற்றி விமர்சிக்க கூடாது என்று கட்சியினருக்கு விஜய் அறிவிறுத்தி இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.
தவெக மட்டுமல்லாது கம்யூனிஸ்டுகள், விசிகவையும் கூட்டணிக்குள் இழுக்க முயல்கிறார் பழனிசாமி. அவரின் இந்த அதிரடிகள் எல்லாமே, ‘கூட்டணி ஆட்சி’ என்று கூவும் பாஜகவை அச்சுறுத்தவே என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மறைமுகமாக அமித்ஷாவுக்கு அறிவுறுத்தி வந்த பழனிசாமி, அமித்ஷாவுக்கு நேரடியாகவே விடும் எச்சரிக்கை இது என்றே பேச்சு எழுந்திருக்கிறது.