
அந்த காலத்தில் கப்பலில் இருந்து வரும் பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்காக ’அந்திக்கடை’ ஒன்று இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என இன்று நாகப்பட்டினம் மாவட்டம் புதூர் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டார்.
அது என்ன அந்திக்கடை?
அந்திக்கடை என்பது 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது என்கிறார்கள்.
சென்னையில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் பர்மா பஜார் போன்று நாகப்பட்டினத்தில் வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல இடம்தான் அந்திக்கடை. பர்மா பஜார் அளவுக்கு கட்டிட அமைப்புகள் இல்லாவிட்டாலும் இங்கேயும் டிவி, செல்போன், வாட்ச், கோடாலி தைலம், துணிகள், காலணிகள் என்று வெளிநாட்டுப் பொருட்கள் அனைத்தும் இங்கே விற்பனை ஆகி வருகின்றன. வெளிநாட்டுப் பொருட்கள் மட்டுமல்லாது உள்நாட்டுப் பொருட்களும் இங்கே விற்பனை ஆகி வருகின்றன.

கஸ்டம்ஸ் கண்ணில் இருந்து தப்பித்து வரும் பொருட்கள், இலங்கை வழியாக கடத்தப்படும் பொருட்களும் கூட இந்த அந்திக்கடையில் கிடைக்கும் என்கிறார்கள்.
ஆரம்பத்தில் பாய்மர கப்பல் மூலமாக இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களும், அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களும், பெரும்பாலும் நாகப்பட்டினம் துறைமுகத்தினையே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
அந்த கப்பலில் பயணம் செய்யும் பயணிகளுக்காவும், பணிபுரியும் கப்பல் ஊழியர்களுக்காவும், வெயில் தணிந்ததும் மாலை நேரத்தில் செயல்பட்டு வந்தது இந்த சந்தை. மாலை நேர சந்தை என்பதால் ‘அந்திக்கடை’ ஆனது.

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் சென்று பின்னர் பர்மா, மலேசியா, சிங்கப்பூர், அந்தமான், நிகோபர், இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகள் சென்று வந்த ரஜூலா பயணிகள் கப்பல் மூலம் வரும் பொருட்கள் இங்கே விற்பனையாகும். ரஜூலா கப்பல் மூலம் வெளிநாட்டுப்பொருட்கள் நாகப்பட்டினத்தில் இறக்குமதி ஆகி, விற்பனை ஆகி வந்துள்ளன.
மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரையிலும் இந்த அந்திக்கடைகள் இயங்கி வந்தன. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இப்படித்தான் அந்திக்கடைகள் இயங்கி வந்தன.

நாகப்பட்டினத்தில் அந்திக்கடை போன்றே நாகூரில் பள்ளி வாசல் கடையும், காரைக்காலில் தர்கா மார்க்கெட்டும் இயங்கி வருகின்றன . இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், நாகூர், காரைக்காலில் நாள் முழுவதும் வியாபாரம் நடக்கும். ஆனால், நாகப்பட்டினத்தில் அந்தியில் மட்டுமே வியாபாரம் என்பதால்த அந்திக்கடை என்ற பெயர் வந்தது.

காலப்போக்கில் அந்திக்கடைக்கு போட்டியாக நகர் முழுவதும் வெளிநாட்டுப் பொருட்கள் விற்னை செய்யப்பட்டு வந்தன. இதனால் வியாபாரப் போட்டியால் அந்தியில் மட்டுமே இயங்கி வந்த அந்திக்கடைகள் பின்னாளில் நாள் முழுவதும் இயங்கத் தொடங்கிவிட்டன.

நாகப்பட்டினம் செல்வோர் அந்திக்கடைக்கு விசிட் அடிக்காமல் போவதில்லை.